Published : 06 Feb 2021 04:12 PM
Last Updated : 06 Feb 2021 04:12 PM
மேற்கு வங்கத்தில் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்ட உதவிகளைக் கிடைக்கச் செய்யாமல் அவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அநீதி இழைத்துவிட்டார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆளும் திரிணமூல் காங்கிரஸ் திட்டம் தீட்டி வருகிறது. மம்தாவை அகற்றிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி சேர்ந்து தனியாக அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளனர். மேற்கு வங்கத்தில் இப்போதே அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கிருஷாக் சுரக்ஸா அபியான் பயணத்துக்காக மேற்கு வங்கத்துக்கு நேற்று சென்றுள்ளார். மால்டா மாவட்டத்தில் பாஜக சார்பில் நடக்கும் பேரணியை இன்று தொடங்கி வைக்கும் ஜே.பி.நட்டா, நாதியா நகரில் பரிவர்த்தன் யாத்திரையையும் தொடங்கி வைத்து பல்ேவறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
நாதியா நகரில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில் “ முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறார். பிரதமர்கிசான் திட்டத்தின் பலன்களைக் கிடைக்கவிடாமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார்.
நான் இங்கு வந்தபோது பாஜக தொண்டர்கள் என்னை நோக்கி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டார்கள்.
ஆனால், கடந்த மாதம் 23-ம் தேதி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், மம்தா பானர்ஜி அமர்ந்திருந்தபோது, அவரை நோக்கி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டதும் அவர் கோப்பபட்டதைப் பார்த்து வியப்பாக இருந்தது. ஏன் ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்டதும் மம்தா நிதானத்தை இழந்தார் என்று வியப்படைந்தேன்.
தன்னுடைய ஈகோவை திருப்தி செய்யும்வரை மாநிலத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் எதையும் மம்தா அமல்படுத்தமாட்டார். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி கிடைக்கும் பிரதமர் கிசான் திட்டத்தை 70 லட்சம் விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாகக் கிடைக்கவிடாமல் மம்தா தடுத்துவந்துள்ளார்”
இவ்வாறு நட்டா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT