Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM
அயோத்தியில் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தின் மீது உரிமை கோரி டெல்லி சகோதரிகள் இருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
1947-ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் தங்கள் சொத்துகளை ஒப்படைத்து விட்டு இந்தியா வந்தவர்களுக்கு சொந்தமாகவும், குத்தகைக்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இங்கிருந்து பாகிஸ்தான் சென்றவர்களின் சொத்துகளும் கைப்பற்றப்பட்டன.
இவ்விரண்டு பணிகளையும் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட உ.பி.யின் நசூல் நிலத்துறை செய்து வந்தது. இந்த வகையில், பாகிஸ்தானின் பஞ்சாபிலிருந்து உ.பி. வந்த கியான் சந்திரா பஞ்சாபி என்பவருக்கு பைஸாபாத்தில் 28 ஏக்கர் நிலம் ரூ.1,560 பெற்றுக்கொண்டு 5 வருடக் குத்தகைக்கு தரப்பட்டுள்ளது. இதில் அவர்கள் அசாமிகள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த குத்தகை காலாவதியான பிறகும் நிலம் அவர்கள் குடும்பப் பயன்பாட்டில் இருந்துள்ளது. இதை அறிந்து நசூல்நிலத்துறை கடந்த 1998-ல் அந்நிலத்தின் பதிவேட்டிலிருந்து கியான் சந்திரா பஞ்சாபி பெயரை நீக்கியது. இதை அறிந்த அவரது குடும்பத்தினர் நசூல் நிலத்துறை முடிவை எதிர்த்து பைஸாபாத் கூடுதல் ஆணையரிடம் மனு அளித்தனர். இம்மனு பரிசீலிக்கப்பட்டு, மீண்டும் அதில் கியான் சந்திரா பெயரை சேர்க்க நசூல் நிலத்துறை சிறப்பு அதிகாரியிடம் கோரலாம் என அறிவுறுத்தப்பட்டது. அந்த 28 ஏக்கர் நிலத்திலிருந்து 5 ஏக்கர் பிரித்து தற்போது மசூதிக்காக உ.பி. அரசு ஒதுக்கியதில் சிக்கல் எழுந்துள்ளது.
இது குறித்து டெல்லியில் வசிக்கும் ராணி பலூஜா என்கிற ராணி கபூர், ரமா ராணி பஞ்சாபி ஆகிய இரு சகோதரிகள் தங்கள் மனுவில் கூறும்போது, “அந்த நிலத்துடன் எங்கள் தந்தைக்கு நசூல் நிலத்துறையில் அரசுப் பணியும் அளிக்கப்பட்டிருந்தது. இப்பிரச்சினையில் கூடுதல் ஆணையர் முடிவின் அடிப்படையில் நசூல் நிலத்துறை மீதுநாங்கள் சிவில் வழக்கு தொடுத்துள்ளோம். இதன் மீது முடிவு எடுக்கப்படும் வரை நாங்களே முழு நிலத்தின் உரிமையாளர்களாக உள்ளோம். எனவே பிரிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர வேண்டும்” என்று கோரியுள்ளனர்.
பல ஆண்டுகளாக நீடித்துவந்த அயோத்தி நிலப்பிரச்சினை கடந்த 2019, நவம்பரில் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் நிலத்தில் கோயில் கட்ட இந்துக்கள் தரப்பிற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், அங்கு இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு ஈடாக அருகில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து உ.பி. அரசு சார்பில் அயோத்தியின் தனிப்பூர் கிராமத்தில் மசூதிக்காக 5 ஏக்கர் நிலம் உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்திடம் அளிக்கப்பட்டது. இதன் சார்பில் ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டு, மசூதி கட்டும் பணி கடந்த ஜனவரி 26-ல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT