Published : 05 Feb 2021 05:31 PM
Last Updated : 05 Feb 2021 05:31 PM
மேற்கு வங்கத் தேர்தலுக்குத் துணை ராணுவப் படை மட்டுமே நியமிக்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) அரசின் பதவிக்காலம் 2020 மே 30 அன்று முடிவடைகிறது. மேற்கு வங்கத்தின் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் அம்மாநிலத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாஜக பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் உட்பட எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு, புதுடெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து சில கோரிக்கைகளை வைத்துள்ளது.
இது தொடர்பாக பூபேந்தர் யாதவ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நாங்கள் இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்தித்து சில குறிப்புகள் அடங்கிய ஒரு கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளோம். அதில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாநிலத்தில் பல கட்டங்களாகத் தேர்தல் நடத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உத்தரவின்படி செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையை நியமிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
ஏனென்றால், மாநில இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவது மாநில அரசாங்கத்தால் தொடர்ந்து பரவலாக உள்ளதால், இந்தச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறோம்.
இதற்காகத் தேர்தலின்போது மத்திய போலீஸ் படைகளின் (சிபிஎஃப்) பணியாளர்களை மட்டுமே நியமிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். தேர்தல் பணிக்கான நேர்மை, கண்ணியம் மற்றும் புனிதத்தை உறுதிப்படுத்தவும் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் அவர்கள்தான் என்பதையும் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்''.
இவ்வாறு பாஜக பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT