Last Updated : 05 Feb, 2021 02:14 PM

3  

Published : 05 Feb 2021 02:14 PM
Last Updated : 05 Feb 2021 02:14 PM

பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் கடவுள் மீது பழிசுமத்துவது தவறு; மத்திய அரசின் கொள்கைதான் பொறுப்பு: மாநிலங்களவையில் சிபிஐ எம்.பி. பேச்சு

எம்.பி. பினோய் விஸ்வம் பேசிய காட்சி: கோப்புப் படம்.

புதுடெல்லி

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் கடவுள் மீது பழிசுமத்துவது தவறு. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானித்தின் மீது மாநிலங்களவையில் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பினோய் விஸ்வம் பேசியதாவது:

''மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் எனக் கூறி அறிவித்தது வெற்று வார்த்தை. ஆனால், மக்களிடம் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே திட்டங்கள் சேர்ந்தன. நான் குடியரசுத் தலைவர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தேசிய வேலைவாய்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம். நாட்டில் உள்ள இளைஞர்கள் சந்திக்கும் வேலையின்மைப் பிரச்சினைகளை அடையாளம் காணும் வகையில் இருக்க வேண்டும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களுக்குக் கடவுள்தான் காரணம் என்று பழிபோடுகிறார். அது தவறானது. எப்படி கடவுளைக் காரணமாகக் கூற முடியும். கரோனா காலத்தில் நாடு பெரும் சிக்கல்களைச் சந்தித்தது. ஆனால், பொருளாதாரம் கரோனா காலத்துக்கு முன்பிருந்தே இறங்கு முகத்தில், மந்தநிலையில்தானே இருந்தது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே பொருளாதாரச் சிக்கல்களுக்குக் காரணம்.

2020ம் ஆண்டு மார்ச்சில் அதாவது லாக்டவுன் தொடங்கும் முன் பொருளதாார வளர்ச்சி 3.1 சதவீதமாக இருந்தது. அதற்கு முன் 8.2 சதவீதம் இருந்தது. பாஜக அரசின் கீழ் பொருளதாாரம் குழப்பத்தில் விடப்பட்டது.

ஆதலால், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் கடவுள் மீது பழி சுமத்தாதீர்கள். நான் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவன் இல்லை. ஆனால், நான் அனைத்து மதங்களிலும் உள்ள உண்மையான மத நம்பிக்கையாளர்களை நம்புகிறேன்.

ஆதலால், கடவுள் நிச்சயம் கொடூரமானவர் அல்ல. கடவுள் கொடூரமானவராக இருக்க முடியாது. ஆதலால், கடவுள் மீது பழிசுமத்தாதீர்கள். கடவுள் குற்றவாளி அல்ல. உண்மையான குற்றவாளி மத்திய அரசின் கொள்கைகள்தான்.

தோல்விக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாக, அனைத்தும் கடவுளால் நேர்ந்தது, கடவுள் நல்லது ஒன்றும் செய்யவில்லை என பழிசுமத்த அரசு முயல்கிறது.

தனியார் கட்டுமானச் செலவு கடந்த 2019-20இல் 5.1 சதவீதம் இருந்தது. 2020 மார்ச்சில் இது 2.7 சதவீதமாகக் குறைந்தது. கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பின் மிகக் குறைவாகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தக் கரோனா காலத்தில் 35 சதவீதம் அளவுக்கு லாபம் சம்பாதித்துள்ளன. 100 கோடீஸ்வரர்களின் பணத்தை 13.8 கோடி ஏழைகளுக்கு வழங்கலாம். ஆனால், இதில் அரசுக்கு நாட்டமில்லை''.

இவ்வாறு பினோய் விஸ்வம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x