Published : 05 Feb 2021 08:37 AM
Last Updated : 05 Feb 2021 08:37 AM
டெல்லி-உபி காஜிப்பூர் எல்லை , இந்தியா பாகிஸ்தான் எல்லை போன்று இருக்கிறது. போராடும் விவசாயிகளைச் சந்திக்க முயன்ற எங்களை அனுமதிக்காதது ஏன் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து, உ.பி. டெல்லி எல்கையான காஜிப்பூர் பகுதியில் போராடி வரும் விவசாயிகளைச் சந்திக்க 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.பி.க்கள் நேற்று சென்றனர்.
சிரோன் மணி அகாலி தளம் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் அனைத்து எம்.பி.க்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளைச் சந்திக்கச் சென்றார். ஹர்சிம்ரத் பாதல், சுப்ரியே சுலே, கனிமொழி, திருச்சி சிவா, சவுகதா ராய், தேசியமாநாட்டுக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் என 15 பேர் சென்றனர். ஆனால், டெல்லி போலீஸார், தடுப்புகளை அமைத்து விவசாயிகளைச் சந்திக்க முடியாதவகையில் செய்து, எம்.பி.க்களைத் திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து, மக்களவையில் விவசாயிகள் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பியதையடுத்து, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுப்ரியா சுலே, சவுகதா ராய் இருவரும் சென்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவைச் சந்தித்து கடிதம் அளித்தனர்.
அதில், “ காஜிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகளைச் சந்திக்க மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்கள் சென்றோம். ஆனால், அதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை போன்று டெல்லி காஜிப்பூர் எல்லை இருக்கிறது. போராடும் விவசாயிகள் நிலை சிறைக்குள் இருப்பதுபோன்று இருக்கிறது. நாங்கள் என்ன போலீஸ் ஆட்சியிலா வாழ்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை, மக்கள் பிரதிநிதிகளான எங்களை விவசாயிகளைச் சந்திக்க ஏன் அனுமதிக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தனர்.
மக்களவையில் நேற்று விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள், “ வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு இதில் கவுரவம் பார்க்கக் கூடாது. விவசாயிகளை எதிரிகளைப்போன்று நடத்தக்கூடாது” என வலியுறுத்தினர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டதையடுத்து, அவை ஒத்தி வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT