Published : 05 Feb 2021 07:49 AM
Last Updated : 05 Feb 2021 07:49 AM
எங்களுக்கு ரிஹானாவையும் தெரியாது, கிரெட்டா துன்பெர்கையும் தெரியாது. ஆனால், வெளிநாட்டினர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தால் என்ன பிரச்சினை? என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவத்துக்குப்பின் விவசாயிகள் போராட்டம் பிசுபிசுக்கத் தொடங்கியது.
ஆனால், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கண்ணீருடன் மக்களிடம் பேசியது, விடுத்த வேண்டுகோளுக்குப்பின், விவசாயிகள் போராட்டத்தில் முன்பு இருந்ததைவிட கூடுதலாக மக்கள் ஆதரவு பெருகியுள்ளது, வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு அமெரி்க்க பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துங்பெர்க் ஆகியோர் ஆதரவு தெரிவித்து, கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் கருத்துக்கு மத்திய அரசும், பாஜகவும், இந்திய பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி-உபி எல்லையான காஜிபூரில் போராடி வரும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ராகேஷிடம், உங்கள் போராட்டத்தைப் பற்றி வெளிநாட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ராகேஷ் பதில் அளி்க்கையில் “ எங்கள் போராட்டத்துக்கு எந்த வெளிநாட்டு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?.
வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு எதையும் வாரிக் கொடுக்கவில்லை, எங்களிடம் இருந்து எதையும் எடுத்துச் செல்லப்போவதில்லை” எனத் தெரிவித்தார்
அமெரிக்க பாடகி ரிஹானா, நடிகை கலிபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கெரெட்டா துங்பெர்க் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகேஷ் திகைத், “ நீங்கள் குறிப்பிடும் இவர்கள் யாரென்று எங்களுக்குத் தெரியாது. அவர்கள் ஆதரவு அளித்தால் நல்லதுதான்.
எம்.பி.க்கள் விவசாயிகளைச் சந்திக்கச் சென்றபோது, தடுப்புகளை அமைத்து டெல்லி போலீஸார் தடுத்துள்ளனர். இவ்வாறு டெல்லி போலீஸார் செய்தபோது எம்.பி.க்கள் அங்கேயே அமர்ந்திருக்க வேண்டும்.
காஜிபூருக்கு எங்களை சந்திக்க வந்த 15 எம்.பி.க்களுடன் நாங்கள் ஏதும் பேசுவதற்கு முயற்சிக்கவில்லை. எங்களைப் பேசவும் போலீஸார் அனுமதி்க்கவி்ல்லை” எனத் தெரிவித்தார்.
சிரோன்மணி அகாலிதளம், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.பி.க்கல் சேர்ந்து காஜிபூரில் விவசாயிகளைச் சந்திக்க நேற்று சென்றனர். ஆனால், விவசாயிகளைச் சந்திக்க டெல்லி போலீஸார் அனுமதிக்காமல் அவர்களை திருப்பி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT