Published : 04 Feb 2021 06:33 PM
Last Updated : 04 Feb 2021 06:33 PM
உலகெங்கிலும் உள்ள பல்வேறு சிறைகளில் மொத்தம் 7,139 இந்தியக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசியதாவது:
''சாதாரணமாக தங்கள் நாட்டைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள் கூட பொதுவாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதில்லை.
பல நாடுகளில் நிலவும் வலுவான தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக இதுபோன்ற விவரங்களை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட நபர் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் உள்ளூர் அதிகாரிகள் கைதிகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.
உள்ளூர் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள் சிலர் வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குக் கிடைத்த தகவல்களின்படி, 2020 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி வெளிநாட்டுச் சிறைகளில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 7,139 ஆகும். இதில் விசாரணைக் கைதிகளும் அடங்குவர்.
அதிக எண்ணிக்கையிலான அளவில் சவுதி அரேபியாவில் 1,599 இந்தியக் கைதிகள் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறைகளில் 898 பேரும், நேபாளத்தில் 886 கைதிகளும் உள்ளனர். பாகிஸ்தான் சிறையில் 270 மீனவர்கள் மற்றும் 49 பொதுமக்கள் கைதிகளாக உள்ளனர். 548 இந்தியர்கள் மலேசியச் சிறைகளிலும், 536 பேர் குவைத் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மேலும் பலரும் பல்வேறு வெளிநாட்டுச் சிறைகளில் உள்ளனர்''.
இவ்வாறு மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT