Published : 04 Feb 2021 04:35 PM
Last Updated : 04 Feb 2021 04:35 PM
ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சிபிஎம் எம்.பி.யான சு.வெங்கடேசன் புகார் தெரிவித்துள்ளார். ரூ.11 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில் வெறும் ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மதுரை மக்களவை தொகுதி எம்.பி.யுமான சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது:
மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழகத்தின் 11 புதிய பாதை திட்டங்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்நிலையில் வெறும் 95 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் 208 கோடி ரூபாய் தேவைப்படுகிற ராமேஸ்வரம்- தனுஷ்கோடி திட்டத்துக்கு 75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கான புதியபாதை திட்டத்தின் 1800 கோடி ரூபாய்க்கு வெறும் 20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற பல புதிய பாதைகளுக்கு தேவையான ரூ.10,000 கோடிக்கு பதிலாக தலா வெறும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது..
இதில், திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு -புத்தூர்; ஈரோடு -பழனி; சென்னை- மகாபலிபுரம்- கடலூர்; கூடுவாஞ்சேரி- திருப்பெரும்புதூர்; மொரப்பூர்- தர்மபுரி; காரைக்கால் -பேரளம்; சின்னசேலம்- கள்ளக்குறிச்சி; தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய பாதைகள் உள்ளன.
இதைப்போல மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி மின் மயத்துடன் கூடிய இரட்டைப் பாதை, வாஞ்சி மணியாச்சியிலிருந்து நாகர்கோயில் பாதை, திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு என மூன்று திட்டங்களுக்கும் மீதி ரூ.3000 கோடி தேவைப்படுகிறது.
ஆனால் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெறும் 775 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2017 இல் அறிவித்தபோது 2022 இல் முடியும் என்று மத்திய அமைச்சரவை கூறியது.
ஆனால் இப்போதைய நிலைமையில் 2025 இல் கூட இந்தத் திட்டம் முடிவடையாத நிலை உள்ளது. மத்திய பட்ஜெட் தமிழகத்தின் ரயில் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது.
மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த திட்டங்களுக்கான போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோருகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT