Published : 04 Feb 2021 04:08 PM
Last Updated : 04 Feb 2021 04:08 PM
பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரரான பிரஹலாத் தாமோதர்தாஸ் மோடி நேற்று லக்னோ வந்திருந்தார். அப்போது அவரை வரவேற்க வந்த பத்து பேரை லக்னோ போலீஸார் விசாரணைக்காக பிடித்ததைக் கண்டித்து பிரஹலாத் மோடி (66) செய்த தர்ணா பரபரப்பிற்கு உள்ளானது.
குஜராத்தின் அஹமதாபாத்தில் சிறிய கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் பிரஹலாத் தாமோதர்தாஸ் மோடி. பிரதமர் நரேந்திர மோடியின் உடன் பிறந்த இளைய சகோதரரான இவர், சுல்தான்பூரில் ஒரு நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
அங்குள்ள யோகா சமூக அமைப்பினர் பிரஹலாத்தை அழைத்து பாராட்டு விழாவிற்காக ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக அவர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதியம் 2.00 மணிக்கு லக்னோ வந்தடைந்தார்.
இவரை விமானநிலையத்தில் வரவேற்பதற்காக சுல்தான்பூரிலிருந்து வாகனங்களில் வந்த பத்து பேர் லக்னோ போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த தகவலை லக்னோ வந்த பிரஹலாத் அறிந்து கடும் கோபம் அடைந்தார்.
அனைவரையும் விடுவிக்கக் கோரி சுமார் இரண்டு மணி நேரம் அங்கு தர்ணாவில் அமர்ந்தார். இதனால், பெரும் பரபரப்பு நிலவியது.
இது குறித்து லக்னோ நகரக் காவல்துறையினர் கூறும்போது, ‘‘சுல்தான்பூரின் தனியார் நிகழ்ச்சியில் அனுமதியின்றி பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் படங்களை பயன்படுத்தினர்.
இதற்காக, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சுல்தான்பூர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் நடவடிக்கைகளும் சந்தேகத்திற்கு உரியதாக இருந்தன.
இதன் விசாரணைக்காக அனைவரையும் தடுத்து பிடிக்க வேண்டியதாயிற்று. விசாரணை முடிந்த பின் பிரஹலாத் மோடியை சுல்தான்பூ அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதால் அனுப்பி வைக்கப்பட்டனர்.’ என விளக்கம் அளித்தனர்.
இது குறித்து லக்னோ செய்தியாளர்களிடம் பிரஹலாத் மோடி கூறும்போது, ‘‘என்னை வரவேற்க வந்தவர்களைப் பிடித்த காரணத்தை அங்கிருந்த காவல்துறை அதிகாரியிடம் கேட்டேன். இதற்கு அவர் பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவு இது எனக் கூறினார்.
அப்படி எனில், அந்த உத்தரவைக் காண்பிக்கும்படி கேட்டதற்கு மறுத்து விட்டார். எனவே, தர்ணா அமர வேண்டியதாயிற்று.’’ எனத் தெரிவித்தார்.
சுல்தான்பூரை அடுத்து பிரஹலாத் மோடிக்கு உ.பி.யின் ஜோன்பூர் மற்றும் பிரதாப்கரிலும் பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT