Published : 03 Feb 2021 02:17 PM
Last Updated : 03 Feb 2021 02:17 PM
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மம்தா கட்சி கூட்டணியில் காங்கிரஸை இணைக்க லாலு பிரசாத் யாதவ் முயற்சிக்கிறார். இதற்காக அவர் தனது கட்சியின் மூத்த தலைவர்களை பேச்சுவார்த்தைக்காக நேற்று கொல்கத்தா அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் அவரது திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) ஆட்சி செய்கிறது. இங்கு வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக, இதுவரை இல்லாத வகையில் பாஜக எழுச்சி பெற்று வருகிறது.
இதை எப்படியாவது தடுத்து நிறுத்தும் முயற்சியில் தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரான லாலுவும் இறங்கியுள்ளார். இவரது உத்தரவின் பேரில் ஆர்ஜேடியின் மூத்த தலைவர்களான அப்துல் பாரி சித்திக்கீ, ஷியாம் ரஜத் ஆகியோர் கொல்கத்தாவிற்கு மூன்று நாள் பயணமாக நேற்று அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து லாலுவின் மகனும் பிஹார் முன்னாள் முதல்வருமான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் கூறும்போது, ‘‘எனது தந்தையின் அறிவுரையின்படி செல்லும் எங்கள் தலைவர்கள் அபிஷேக் பானர்ஜியுடனும் (மம்தாவின் சகோதரர் மகன்), பிரஷாந்த் கிஷோருடனும் (தேர்தல் பிரச்சார வியூக நிபுணர்) சந்தித்து பேச உள்ளனர்.
எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் இந்த முயற்சிக்கு பின் நாம் யாருடன் கூட்டு வைப்பது என முடிவு செய்வோம்.’’ எனத் தெரிவித்துள்ளார்.
பிஹாரின் முக்கிய எதிர்கட்சியான ஆர்ஜேடி தலைமையில் மெகா கூட்டணி அமைந்தது. இதில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் ஆர்ஜேடி கூட்டணி வைத்துள்ளது. எனினும், மேற்கு வங்க தேர்தலில் பாஜகவின் வெற்றிச்சூழல் வலுத்து வருகிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்தும் பொருட்டு டிஎம்சியை காங்கிரஸுடன் இணைக்க லாலு முயற்சி எடுத்துள்ளார்.
இக்கட்சியின் தலைவர்களான மம்தா மற்றும் சோனியா என இருவருமே லாலு கட்சிக்கு நெருக்கமானவர்கள். இந்த இருவரையும் இணைத்து கூட்டணி அமைத்தால் பாஜகவை தோல்வியுறச் செய்யலாம் என லாலு கருதுகிறார்.
அங்கு இடதுசாரியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் இதற்கு ஒப்பவில்லை எனில், தாம் மம்தாவிடம் சில தொகுதிகள் பெற்று கூட்டணிக்கு லாலு திட்டமிடுவதாகத் தெரிகிறது.
இதனிடையே, பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஆளும் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியு) மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதன்முறையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இங்கு பாஜகவையும் எதிர்த்து தனித்து போட்டியிடும் ஜேடியு, சிறிய கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கவும் முயல்கிறது. மேற்கு வங்கத்தில் பீர்ஜாதா அப்பாஸ் சித்திக்கீயால் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள, ‘இந்தியன் செக்யூலர் பிரண்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஜேடியு முயல்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் ஜார்கண்ட் எல்லையின் சில தொகுதிகளிலும் மட்டுமே நிதிஷுக்கு செல்வாக்கு உள்ளது. இதனால், பிஹார்வாசிகள் மற்றும் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து பாஜகவிற்கு சாதகமானச் சூழலை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT