Published : 03 Feb 2021 02:05 PM
Last Updated : 03 Feb 2021 02:05 PM
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசின் கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால், விவசாயிகள், இந்தப் போராட்டத்தை மற்றொரு ஷாகீன் பாக் போராட்டக் களமாக மாற்றிவிடக் கூடாது என்று மாநிலங்களவையில் பாஜக எம்.பி. புவனேஷ்வர் கலிட்டா தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று எம்.பி.க்கள் பேசினர். பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அவையில் இருந்தனர்.
அப்போது அசாம் மாநில பாஜக எம்.பி. புவனேஷ்வர் கலிட்டா விவாதத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:
''விவசாயிகள் மீது மத்திய அரசு மிகுந்த மரியாதை வைத்துள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரிமைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதே தவிர அவர்களிடம் இருந்து உரிமைகள் பறிக்கப்படவில்லை.
அவையில் குழப்பத்தை விளைவிக்கும், இடையூறு விளைவிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த 3 வேளாண் சட்டங்களும் இரு அவைகளிலும், நீண்ட விவாதத்துக்குப் பின்புதான் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களால் உடனடியாக 10 கோடி சிறு, குறு விவசாயிகள் பலன் அடைவார்கள்.
விவசாயிகளுடன் மத்திய ரயில்வே அமைச்சர், வேளாண் அமைச்சர் உள்ளிட்டோர் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.
ஆதலால், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசின் கதவுகள் திறந்த இருக்கின்றன. அனைத்து விதமான அம்சங்களையும் ஆலோசிக்க, விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், நம்முடைய பல நண்பர்களுக்கு விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், தயவுசெய்து விவசாயிகள் போராட்டத்தை மற்றொரு ஷாகீன் பாக் போராட்டமாக மாற்றிவிடக் கூடாது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் விவசாயிகள் போராட்டத்தை மற்றொரு ஷாகீன் பாக் போராட்டமாக மாற்ற விரும்புகிறார்கள். அசாமில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் புதிய கட்சியை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் தேர்தலில் என்ன முடிவு கிடைத்தது, காங்கிரஸ் கட்சிக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் என்ன முடிவு கிடைத்தது என்பது நினைவிருக்கும். பாஜக கூட்டணி அசாமில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்''.
இவ்வாறு கலிட்டா தெரிவித்தார்.
பாஜக எம்.பி. விஜய்பால் சிங் தோமர் பேசுகையில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீண்ட விவாதத்துக்குப் பின்புதான் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக 12 வல்லுநர்கள் குழு அமைத்து விவசாய சீர்திருத்தம் குறித்து ஏதும் செய்யவில்லை. வேளாண் சட்டங்களைக் குறை கூறுவோர், தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் 2009-2014 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு விவசாயத்துக்கு ரூ.1.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2019-20ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1.51 லட்சம் கோடி ஒதுக்கியது. காங்கிரஸ் கட்சி 5 ஆண்டுகள் ஒதுக்கிய தொகையை பாஜக ஆட்சி ஒரு ஆண்டில் ஒதுக்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT