Published : 03 Feb 2021 01:25 PM
Last Updated : 03 Feb 2021 01:25 PM
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின்போது நடந்த வன்முறை தொடர்பாக தவறான கருத்துகளைப் பதிவிட்டமைக்காக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசி தரூர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் சார்பில் குடியரசு தினத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இந்த டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். விவசாயிகளும் காயமடைந்தனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக ட்விட்டரில் மக்களை திசைதிருப்பக்கூடிய, கலவரத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய கருத்துகளைப் பதிவிட்டார் எனக் குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிர்னால் பாண்டே, ஜாபர் ஆகா, பரேஷ் நாத், ஆனந்த் நாத் ஆகியோர் மீது நொய்டா போலீஸார் தேசதுரோக வழக்குப் பதிவு செய்தனர்.
டிராக்டர் பேரணியில் நடந்த கலவரம் தொடர்பாக தவறான கருத்துகளைத் தெரிவித்தமைக்காக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட 6 பத்திரிகையாளர்களுக்கு எதிராக மத்தியப் பிரதேச போலீஸாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீது, தேசதுரோக வழக்கு, விரோதத்தைத் தூண்டுதல், குற்றச் சதி, தவறான கருத்துகளைப் பரப்பி குழப்பம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
டெல்லி போலீஸார் மற்றும் குருகிராம் போலீஸார் பதிவு செய்ய முதல் தகவல் அறிக்கையில், “டிராக்டரில் வந்த விவசாயி ஒருவரை டெல்லி போலீஸார் கொலை செய்துவிட்டார்கள் என்று இன்ஸ்டாகிராமில் சசி தரூர் தவறான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
பல்வேறு சமூகத்தினருக்கு இடையே பகையை, மோதலை வளர்த்துவிடும் நோக்கில் திட்டமிட்டு கருத்துகளைத் தெரிவித்தது தெளிவாகிறது.
குற்றச்சாட்டுக்கு ஆளாகிய நபர்கள், திட்டமிட்டு, எந்தவிதமான ஆதாரங்கள் இன்றி, உண்மையை ஆய்வு செய்யாமல், உறுதி செய்யாமல், உள்நோக்குடன் பொய்ச் செய்திகளை வெளியிட்டுப் போராட்டக்காரர்களுக்கு இடையே வன்முறையைப் பரப்பத் திட்டமிட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தங்கள் மீது டெல்லி போலீஸார் பதிவு செய்த தேசதுரோக வழக்கை எதிர்த்து பத்திரிகையாளர்கள், மிர்னால் பாண்டே, ஜாபர் ஆகா, பரேஷ் நாத், ஆனந்த் நாத் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.
தற்போது காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும், தன் மீது பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT