Published : 03 Feb 2021 12:37 PM
Last Updated : 03 Feb 2021 12:37 PM
எல்லைப்பகுதியில் எந்த சவாலையும் முறியடிக்க இந்தியா விழிப்புடன் தயாராக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
மிகப்பெரிய சர்வதேச விமான கண்காட்சியான ஏரோ இந்தியா கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். பெங்களூரில் உளள் எலஹங்கா விமானப்படை தளத்தில் இந்த கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறுகிறது.
80 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 540 நிறுவனங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
இதில் பாதுகாப்புத்துறையின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தற்சார்பு இந்தியாவின் ஒரு பகுதியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் மற்றும் விண்வெளி பயன்பாட்டுக்கான நவீன தயாரிப்புகள் மற்றும் கருவிகளை காட்சிக்கு வைத்துள்ளது.
கண்காட்சியை தொடங்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டை சேர்ந்த பெரிய மற்றும் கூட்டு பாதுகாப்பு தளவாட நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில், ராணுவத்தை நவீனப்படுத்த 130 பில்லியன் டாலர் செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பு துறையில் நேரடி அன்னிய முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏரோ இந்தியா 21 கண்காட்சி இந்தியாவின் ஆற்றலையும் பாதுகாப்பு மற்றும் வான்வெளி துறையில் நமது நாட்டில் உள்ள வாய்ப்புகளையும் உலக நாடுகளுக்கு எடுத்து காட்டுகிறது.
பல நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் நேரடியாகவும், பல நாடுகளின் அமைச்சர்கள் மெய்நிகர் முறையிலும் இந்த கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.
பல முனைகளில் இருந்து இந்தியா அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்தித்து வருகிறது. எந்த சவாலையும் அச்சுறுத்தல்களையும் முறியடிக்க இந்தியா விழிப்புடன் தயாராக உள்ளது.
இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் எம்கே 1 ஏ ரக போர்விமானங்கள் தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பு ஒப்பந்தம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தில், பாதுகாப்பு துறையில் கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து விமான சாகச நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
#WATCH | Airborne Early Warning and Control (AEW&C) System aircraft flying past in Netra formation at Aero India show in Bengaluru. pic.twitter.com/dc50ze20ML
— ANI (@ANI) February 3, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT