Published : 03 Feb 2021 08:00 AM
Last Updated : 03 Feb 2021 08:00 AM

குடியுரிமைச் சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி

குடியுரிமைச் சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக துணை குழுவிற்கான காலக்கெடு ஜூலை 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியுரிமை (திருத்த) சட்டம், தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றச்செயல் கண்காணிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட பதில்கள்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் நித்யானந்த் ராய் மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் கீழ்கண்ட தகவல்களை அளித்தனர்.

2019 டிசம்பர் 12 அன்று அறிவிக்கப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்டம், 2020 ஜனவரி 10 அன்று அமலுக்கு வந்தது. குடியுரிமை (திருத்த) சட்டம், 2019-கான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான காலக்கெடு 2021 ஏப்ரல் 9 வரை மக்களவை துணை சட்டக் குழுவிற்கும், 2021 ஜூலை 9 வரை மாநிலங்களவை துணை சட்டக் குழுவிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை அரசு கடைபிடித்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளின் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக தீவிரவாத செயல்கள் கணிசமாக குறைந்துள்ளன. எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

குற்றச்செயல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு அமைப்பு (சிசிடிஎன்எஸ்) மற்றும் ஐசிஜிஎஸ் ஆகியவை குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நிர்ணயித்த இலக்கு 14306 ஆக இருந்த போதிலும், 15773 காவல் நிலையங்களில் குற்றச்செயல்கள் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு அமைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 383 காவல் நிலையங்களில் இதை நிறுவுவதற்கான பணி தொடங்கியுள்ளது.

மத்திய ஆயுதம் தாங்கிய காவல் படைகளில் 27,167 பெண்கள் பணிபுரிகிறார்கள். மத்திய ஆயுதம் தாங்கிய காவல் படைகளில் பெண்களுக்கு பணி வழங்கவும், பதவி உயர்வு வழங்கவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x