Published : 03 Feb 2021 07:45 AM
Last Updated : 03 Feb 2021 07:45 AM
ஹைதராபாத்தில் நடந்த ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை முதன்முறையாக மெட்ரோ ரயில் மூலம் மருத்துவர்கள் விரைந்து எடுத்துச் சென்று மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி நரசா ரெட்டி (45) ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என அறிவுறுத்தினர். இதற்கு நரசா ரெட்டியின் குடும்பத்தார் சம்மதித்தனர். இதையடுத்து, எல்.பி. நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு நரசா ரெட்டியின் இதயத்தை கொண்டு சென்று, அங்கு மற்றொருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த வழித்தடத்தில் இதயத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துச் செல்ல முடியாது என நினைத்த மருத்துவர்கள், மெட்ரோ ரயில் மூலம் இதயத்தை கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீஸாரிடமும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் சம்மதித்ததைத் தொடர்ந்து, நேற்று காலையில் பாதுகாப்பு கொண்ட ஒரு பெட்டியில் இதயம் வைக்கப்பட்டு மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது. வெறும் அரை மணி நேரத்தில் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டு, டாக்டர் கோகல் தலைமையில் அங்கு இதய மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT