Published : 02 Feb 2021 05:41 PM
Last Updated : 02 Feb 2021 05:41 PM
‘பெண் சக்தி விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிப்ரவரி 6ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாப்படுவதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான பணி செய்த பெண்களை அங்கீகரிப்பதற்காக பெண் சக்தி விருதை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது.
முடிவெடுக்கும் விஷயங்களில் பெண்களை ஊக்குவித்தல், பெண்களின் திறமையை ஊக்குவித்தல், கிராமப்புற பெண்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கலை, கலாச்சாரம் ஆகிய துறைகளில் பெண்களை ஊக்குவித்தல், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்க்கை திறன்கள், பெண்களுக்கு மரியாதை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பணிகள் செய்வது ஆகியவைகளை கருத்தில் கொண்டு இந்த விருது அளிக்கப்படுகிறது.
தனிநபர்கள், குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், பிற நிறுவனங்களுக்கு பெண் சக்தி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.
விதிமுறைகள் படி, இந்த விருதுக்கு, குறைந்தது 25 வயதுடைய தனிநபர்கள், சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
சமூக முன்னேற்றத்தில், பெண்களை சம அளவில் அங்கீகரிக்கும் முயற்சியாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT