Last Updated : 02 Feb, 2021 01:40 PM

1  

Published : 02 Feb 2021 01:40 PM
Last Updated : 02 Feb 2021 01:40 PM

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு குழந்தைகள் நலனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைப்பு: குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேதனை

கோப்புப்படம்

புதுடெல்லி

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2021-22ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் குழந்தைகள் நலனுக்கு நிதி ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்புகள் ஆதங்கம் தெரிவித்துள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின், குழந்தைகள் நலனுக்கும், கல்விக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சிஆர்ஒய் எனும் குழந்தைகள் நல அமைப்பின் இயக்குநர் ப்ரீத்தி மஹாரா கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2021-22ஆம் நிதியாண்டில் குழந்தைகள் நலனுக்கான நிதிஒதுக்கீடு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2010-11ஆம் ஆண்டில் பட்ஜெட்டில் 4.06 சதவீதம் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடு இருந்தநிலையில், 2021-22ஆம் ஆண்டில் 2.46 சதவீதம்தான் இருக்கிறது. ஏறக்குறைய 1.6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 0.70 சதவீதம் குழந்தைகள் நலனுக்கான நிதி குறைக்கப்பட்டு, 2.46 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு 2020-21ஆம் ஆண்டில் 3.16 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது.

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு மட்டுமே பட்ஜெட்டில் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், குழந்தைகள் மீது நாம் செய்யும் முதலீடு என்பது, எதிர்காலத்தில் பன்மடங்கு பலனைக் கொடுக்கும் என்பதுதான் உண்மை ஆனால், அது தவறவிடப்பட்டுள்ளது. இது தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளுக்கான கல்வி, பாதுகாப்பும் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை குறித்து தேசம் மிகுந்த நம்பிக்கையுடன், எதிர்பார்ப்புடன் இருக்கிறது. ஆனால், மத்திய பட்ஜெட்டில், தகவல் தொடர்பு வசதியில்லாத கிராமப்புற மாணவர்களை எவ்வாறு பிரதான கல்வி நீரோட்டத்துக்குக் கொண்டுவருவது, அதற்கான நடவடிக்கைகள், வசதிகள் குறித்து ஏதும் இல்லை.

கரோனா வைரஸ் காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியானது. குழந்தைத் தொழிலாளர் அதிகரிப்பு, குழந்தைகள் கடத்தல், குழந்தைத் திருமணம் அதிகரிப்பு போன்றவை கவலைக்குரியதாக இருந்தன. ஆனால், இவற்றுக்கு ஏதாவது தீர்வு அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு இருக்கும் என நினைத்தோம், நிதி ஒதுக்கீடு இருக்கும் என நினைத்தோம். ஆனால், ஏதும் இல்லை என்பது ஏமாற்றம்.

2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஆய்வு செய்யும்போது, எதிர்கால தேசத்தைக் கட்டியெழுப்பும் வாய்ப்பில் குழந்தைகளைச் சேர்க்க மறந்துவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

குழந்தைகள் உரிமைகள் அமைப்பான ஹெஏகியூ(HAQ), நைன் இஸ் மைன் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், “கரோனா காலத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு நிதியுதவி தேவைப்படும் நிலையில், திருத்தப்பட்ட மதிப்பீட்டில், 2020-21ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் 16.22 சதவீதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

2021-22ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் ஒட்டுமொத்த நிதி 14.49 சதவீதம் அதிகரித்திருந்தாலும், அிதல் குழந்தைகளுக்கான பங்கு குறைந்துள்ளது. பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி மற்றும் கல்வியறிவுப் பிரிவில், நிதி ஒதுக்கீடு 9.71 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

முழுமையான கல்வி, கல்வித்தரம் ஆகியவற்றைப் புதிய கல்விக் கொள்கையில் பேசிவிட்டு, அதற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

2020-21ஆம் ஆண்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைவிட 2021-22ஆம் ஆண்டில் குறைவாக 6.13 சதவீதம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக சமக்ர சிக்ஸா அபியான் திட்டத்துக்கு நிதி நடப்பு நிதியாண்டில் ரூ.38,750.50 கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால், 2021-22 பட்ஜெட்டில் ரூ.31,050.16 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் குழந்தைகள் பாதுகாப்புக்கான நிதி ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் 40 சதவீதம் குறைக்கப்பட்டு, ரூ.900 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x