Published : 02 Feb 2021 12:51 PM
Last Updated : 02 Feb 2021 12:51 PM
தேர்தல் நடக்கும் மாநிலங்களில் மக்களின் வாக்குகளைக் கவர பட்ஜெட்டைக் கருவியாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஜிட்டல் குதிரையில் மக்களைக் கனவு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது 9-வது பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது மற்றும் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனா கட்சி, தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் எழுதியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
''மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தேர்தல் நடக்கும் மாநிலங்களை மனதில் வைத்து, வாக்குகளைக் கவரும் நோக்கில் தயாரிக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் குதிரையில் மக்களைக் கனவு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய தேர்தல் நடக்கும் மாநிலங்களை மையமாக வைத்து சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கவர பட்ஜெட்டைக் கருவியாக மத்திய அரசு பயன்படுத்துவது பொருத்தமானதா?
தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்குச் சலுகைகளை, திட்டங்களை பட்ஜெட்டில் வழங்கிய மத்திய அ ரசு மகாராஷ்டிர மாநிலத்தைப் புறக்கணித்துவிட்டது. பழிவாங்கும் மனநிலையில் மத்திய அரசு மகாராஷ்டிராவை அணுகியுள்ளது தெரிகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதற்கும் நிதியமைச்சர். சில மாநிலங்களுக்கு மட்டும் அல்ல என்பதை உணர வேண்டும். தேர்தல் நடக்காத மாநிலங்களுக்கு அல்லாத பட்ஜெட்டாகவே இருக்கிறது.
நாக்பூர், நாசிக் மெட்ரோ திட்டங்களுக்கு எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் இல்லை. மும்பைக்கும், மகாராஷ்டிராவுக்கும் எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் இல்லை. எதற்காக இந்தப் பாகுபாடு? நாடு முழுவதையும் மனதில் வைத்து நிதியமைச்சகம் செயல்பட வேண்டும்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆயிரக்கணக்கான தொழில்கள் இழப்பில் இருக்கின்றன. ஏராளமான மக்கள் வேலையை இழந்துள்ளார்கள், வேலையின்மை அதிகரித்துள்ளது. ஆனால், பட்ஜெட்டில் இதுகுறித்து நிதியமைச்சர் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்தச் சரிவிலிருந்து தொழில்துறை எவ்வாறு மீளும், மக்கள் எவ்வாறு மீண்டும் இழந்த வேலைவாய்ப்புகளைப் பெறப் போகிறார்கள் என்பது குறித்தும் நிதியமைச்சர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இந்த பட்ஜெட்டிலிருந்து நம்முடைய பாக்கெட்டுக்கு என்ன கிடைக்கும் எனச் சாமானிய மக்கள் சிந்திக்கிறார்கள். ஆனால், எதுவுமே கிடைக்காது என்பதுதான் நிதர்சனம்.
பழைய கோஷங்களான தற்சார்பு இந்தியா, ஸ்டார்ட் அப், புதிய வார்த்தைகளான உள்கட்டமைப்பு, வேளாண் மேம்பாடு ஆகியவற்றாலும் பட்ஜெட்டிலிருந்து மக்கள் ஏதும் பெறப் போவதில்லை. இதுவரை காகிதக் குதிரைகளாக இருந்த பட்ஜெட் தற்போது டிஜிட்டல் குதிரைகளாக வந்துள்ளன. கிணற்றில் ஒரு சொட்டு நீர் கூட ஊற்றாதவர்கள், மக்களுக்குக் குடம் குடமாக நீர் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT