

மேற்கு வங்க தேர்தலை மனதில் கொண்டு சிவப்பு நிற புடவையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் சிவப்பு நிற புடவைகள் வெகு பிரபலம். மேற்கு வங்கத்தின் பிரபலமான பண்டிகையான துர்கா பூஜையின் கடைசி நாள் விழாவின்போது பெரும்பாலான பெண்கள் லால் பாட் எனப்படும் சிவப்பு நிற புடவையை அணிந்துகொள்வர்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த புடவையை அணிந்திருந்தார்.
வரும் ஏப்ரலில் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலை மனதில் வைத்து மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்காக பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டன.
அந்த தேர்தலை மனதில் வைத்துத்தான் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவப்பு நிற லால் பாட் புடவையை அணிந்து வந்தார் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தனது பட்ஜெட் உரையின்போது வங்கத்து கவிஞரும், நோபல் பரிசை வென்றவருமான ரவீந்திரநாத் தாகூரின் கவிதை வரிகளை மத்திய அமைச்சர் மேற்கோள் காட்டினார். தேர்தலை மனதில் வைத்துத்தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு பேசினார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.