Published : 05 Nov 2015 12:30 PM
Last Updated : 05 Nov 2015 12:30 PM
இந்தச் செய்தியில் தலைப்பை பார்த்து குழப்பம் அடைய வேண்டாம். பிஹாரின் பூர்ணியாவில் 'பாகிஸ்தான் டோலா' எனும் பெயரில் ஒரு கிராமம் உள்ளது. தேர்தலை புறக்கணித்துள்ள அந்த கிராமத்தின் வாக்காளர்கள்தான், பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் பட்டாசு வெடித்து கொண்டாடப் போவதாக அறிவித்துள்ளனர்.
பிஹாரில் ஐந்து கட்டமாக கடந்த அக்டோபர் 12-ல் துவங்கிய சட்டப்பேரவை தேர்தல் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நேபாள எல்லையில் அமைந்துள்ள சீமாஞ்சல் பகுதியின் ஒன்பது மாவட்டங்களின் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு மாவட்டமான பூர்ணியா மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது பாகிஸ்தான் டோலா. இங்கு சந்தலா எனும் பழங்குடியினரின் சுமார் ஐம்பது குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பாகிஸ்தானுடன் சேர்ந்து அதன் அருகிலுள்ள பிரேம் நகர், பிரித்தி டோலா, முர்லியா, கோலாபாரி மற்றும் மாதவ் நகர் ஆகிய கிராமங்களும் இந்த முறை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதற்கு, தம் தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆபாக் ஆலம் மீது கடும் அதிருப்தியாக இருப்பது காரணம் ஆகும்.
எனவே, இந்தத் தேர்தலில் பாஜக வென்றால் தாம் அனைவரும் அதிகமாக சந்தோஷப்பட இருப்பதாகவும், இதற்காக பட்டாசு வெடித்து தீபாவளியை போல் கொண்டாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதன் அருகிலுள்ள ரக்சோல் எனும் இடத்தின் பிரச்சார மேடையில் பேசிய பாஜகவின் தேசிய தலைவரான அமித் ஷா பாகிஸ்தான் நாட்டைக் குறிப்பிட்டு கூறிய கருத்து குறித்து தெரியவில்லை. இங்கு அமித் ஷா, பிஹாரில் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவின் மகா கூட்டணி வென்றால் பாகிஸ்தான் நாட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் எனக் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.
பிஹார் மாநில அரசு பதிவேடுகளிலும் பாகிஸ்தான் டோலா எனும் பெயரையே தாங்கி உள்ள இந்த கிராமத்தில் வசித்த முஸ்லிம்கள் பிரிவினைக்கு பின் வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்து விட்டனர். இதனால், இங்கு தற்போது முஸ்லிம்களின் குடும்பங்கள் ஒன்று கூட இல்லை எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT