Last Updated : 01 Feb, 2021 06:40 PM

4  

Published : 01 Feb 2021 06:40 PM
Last Updated : 01 Feb 2021 06:40 PM

விவசாய வரி விதிப்புக்குப் பின்பும் பெட்ரோல், டீசல், மதுபான விலை உயராது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (ஏஐடிசி) விதிக்குப் பின்பும் பெட்ரோல், டீசல், மதுபான விலை உயராது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (ஏஐடிசி) வரி என்று புதிய வரி இந்த பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியைக் குறைத்துவிட்டு, மறுபுறம் வேளாண் கட்டமைப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நாட்டின் வேளாண்துறையை மேம்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காகப் புதிதாக வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வரியால் நுகர்வோர்கள் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை அதிகரிக்காது. அவர்களுக்குச் சுமையாகவும் இருக்காது.

வேளாண் கட்டமைப்பை உடனடியாக மேம்படுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சேமித்தல், பதப்படுத்துதலையும் திறம்படச் செய்ய வேண்டும். நம்முடைய விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்க வேண்டும். இதனால் இந்தப் புதிய வரி விதிக்கப்படுகிறது.

இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.50 வரியும், டீசல் மீது ரூ.4 வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வரியால் நுகர்வோருக்கு எந்தவிதமான கூடுதல் சுமையும் இருக்காது. அதேநேரத்தில் பெட்ரோல்,டீசல் மீதான அடிப்படை சுங்கவரியும், சிறப்பு கூடுதல் சுங்க வரியும் குறைக்கப்பட்டு இருப்பதால், நுகர்வோருக்குக் கூடுதல் சுமை இருக்காது” எனத் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், ''இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மீது 2.5 சதவீதம் வேளாண் கட்டமைப்பு வரி புதிதாக விதிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 100 சதவீதம் வரி, கச்சா பாமாயில் மீது 17.5 சதவீதம் கட்டமைப்பு வரி, நிலக்கரி, லிக்னைட் ஆகியவை மீது 1.50 சதவீதம் வரி, உரம், யூரியா ஆகியவை மீது 5 சதவீதம், பருத்தி மீது 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் இந்தப் பொருட்களின் விலை வருங்காலத்தில் உயரலாம்.

பெட்ரோல், டீசல், மதுபானங்கள் மீது புதிய வரி விதிக்கப்பட்டாலும், அடிப்படை சுங்கவரி குறைக்கப்பட்டதால் விலை உயர்வுச் சுமை நுகர்வோர் மீது இருக்காது. அதனால் பெட்ரோல், டீசல், மதுபான விலை உயராது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x