Published : 01 Feb 2021 02:30 PM
Last Updated : 01 Feb 2021 02:30 PM
கரோனா வைரஸ் பரவல் காரணமாக, வரும் 2021-22ஆம் நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.2.24 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது நடப்பு நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட, 137 சதவீதம் அதிகமாகும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
''கிராமப்புற அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டது.
இலவச சமையல் கேஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தில் 2021-22ஆம் நிதியாண்டில் மேலும் ஒரு கோடி பேருக்கு நீட்டிக்கப்படும். கரோனா வைரஸ் பரவல் காலத்தில்கூட எரிபொருள் விநியோகத்தில் தடைகள் ஏதும் இல்லை.
வாகனங்களுக்கு சிஎன்ஜி கேஸ் இணைப்பு வழங்குதல், குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 100 மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்படும்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக சுகாதாரத் துறைக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 846 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.94 ஆயிரத்து 452 கோடியாக மட்டுமே இருந்தது. ஏறக்குறைய 137 சதவீதம் அதிகமாக அடுத்த நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குவதற்காக அடுத்த நிதியாண்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆண்டு 50 ஆயிரம் பேர் இறப்பைத் தடுக்கும் வகையில் நிமோனியா காய்ச்சலைத் தடுக்கும் தடுப்பூசிகள், செப்டிகாமியா, மெனிங்டிஸ் ஆகிய பாதிப்புகளில் இருந்து காக்க தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும்.
கரோனா தடுப்பூசிகள் வழங்க ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் தொகையை ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது. நிமோனியா காய்ச்சலைத் தடுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி தற்போது 5 மாநிலங்களில் மட்டுமே இருக்கிறது. இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்''.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT