Published : 01 Feb 2021 01:22 PM
Last Updated : 01 Feb 2021 01:22 PM
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உள்கட்டமைப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில் 2021-22ஆம் நிதியாண்டில் முதலீட்டுச் செலவை ரூ.5.54 லட்சம் கோடியாக பட்ஜெட்டில் உயர்த்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
கடந்த நிதியாண்டில் முதலீட்டுச் செலவு ரூ.4.39 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அதைவிட 34.5 சதவீதம் அதிகமாக அடுத்த நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியதாவது.
''2020-21ஆம் நிதியாண்டில் முதலீட்டுச் செலவு அதிகரிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் முதலீட்டுச் செலவு ரூ.4.12 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில், வளங்களை அதிகரிக்கும் நோக்கில், ரூ.4.39 லட்சம் கோடியாக திருத்தப்பட்ட மதிப்பின் அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது .
அடுத்த நிதியாண்டான 2021-22ஆம் ஆண்டில் முதலீட்டுச் செலவு இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட 34.5 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்படும். அதாவது ரூ.5.54 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
நாட்டில் உள்ள சுயாட்சி பெற்ற மாநில அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதலீட்டுச் செலவாக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்துக்காக 4,378 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021-22ஆம் நிதியாண்டில் ஸ்வச் பாரத் 2.0 நடைமுறைப்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்துக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 678 கோடி ஒதுக்கப்படும்.
உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்படும்''.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT