Last Updated : 01 Feb, 2021 11:09 AM

1  

Published : 01 Feb 2021 11:09 AM
Last Updated : 01 Feb 2021 11:09 AM

காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வரவேண்டும்; அமித் ஷா, கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: டெல்லி காங்கிரஸ் தீர்மானங்கள் நிறைவேற்றம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும், அமித் ஷா,கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என 3 தீர்மானங்களை டெல்லி காங்கிரஸ் நேற்று நிறைவேற்றியுள்ளது.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என முதன்முதலாக டெல்லி பிரிவு காங்கிரஸ் குரல் எழுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்கள் இனிவரும் நாட்களில் தீர்மானம் நிறைவேற்றலாம் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் கட்சிக்குத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதத்தில் நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்கும் முயற்சிகளை சில தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் எனக் கோரி டெல்லி யூனியன் பிரதேச காங்கிரஸ் பிரிவு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்கள், ஜெகதீஷ் டைட்லர், கிருஷ்ணா திராத், ரமேஷ் குமார், கிரன் வாலியா, ஹருன் யூசுப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக நியமிக்கக் கோரி டெல்லி காங்கிரஸ் சாலைவர் அனில் சவுத்ரி, தீர்மானத்தை முன்மொழிந்தார். மேலும், விவசாயிகள் பிரச்சினையைத் தவறாகக் கையாண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனில் சவுத்ரி பேசுகையில், “காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும். நாடு இன்று கடினமான கட்டத்தைக் கடந்து வருகிறது. மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசு ஒரே நேரத்தில் நாட்டின் ஜனநாயகம், பொருளாதாரதம், சமூக மற்றும் மத உணர்வைக் காயப்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி எப்போதும் நாட்டின் அச்சுறுத்தல் குறித்து நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார். காங்கிரஸ் தொண்டர்களுக்கு நம்பிக்கையளிக்க ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

டெல்லி காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீர்மானம் குறித்து பாஜக, ஆம் ஆத்மி கட்சி இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x