Published : 01 Feb 2021 03:12 AM
Last Updated : 01 Feb 2021 03:12 AM
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுப்பதே சரியானது என டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் கூறியுள்ளார்.
அவர். ‘இந்து தமிழ்’ நாளி தழுக்கு அளித்த பேட்டி:
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் உச்ச நீதிமன்றமே முடிவு எடுக்காமல் ஆளுநருக்கு அனுப்பியது ஏன்?
ஒரு குற்றத்துக்கான வழக்கைவிசாரித்து இறுதித் தீர்ப்பளித்ததுடன் உச்ச நீதிமன்றத்தின் கடமை முடிந்து விட்டது. அதன் பிறகு வரும் முன்கூட்டியே விடுதலை, கருணை மனு போன்றவை மத்திய அல்லது அம்மாநில அரசின்ஆட்சி நிர்வாக செயல்பாடுகளுக்கு உட்பட்டது. தற்போதைய நிலையின்படி இந்த விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும். அப்படி எடுக்கவில்லை எனில் பிறகு உச்ச நீதிமன்றமே முடிவுஎடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் சூழலை ஏற்படுத்துவது ஒரு தவறான முன் உதாரணம். எனவே, இப்பிரச்சனையில் தமிழக ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தாமல் முடிவு எடுப்பதே சரியானதாக இருக்கும்.
இது ஒரு முன்னாள் பிரதமர்கொல்லப்பட்ட வழக்கு என்பதால்விடுதலையில் சிக்கல்கள் நேரிட்டி ருப்பதாகக் கருதப்படுகிறதே?
ஒரு வழக்கின் விசாரணையில் அதன் குற்றத்தன்மையை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அதில், பாதிக்கப்பட்டது யார்? என்பதை குறிப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை. குற்றங்களைப் பொறுத்து அதில் அளிக்கப்படும் தண்டனை ஒரே வகையானது. இவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது என்பதால் ஏழு பேரையும் விடுதலை செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.
மற்ற வழக்குகளில் தண்டனைபெற்றவர்களை விடுவித்ததுபோல இந்த 7 பேரை விடுதலைசெய்யாதது மனித உரிமை மீறல் எனக் கூற முடியுமா?
ஏழு பேரும் குறிப்பிட்ட விதிமுறைகள் இன்றி தங்கள் மீது பாரபட்சம் காண்பிக்கப்படுவதாகக் கூறலாமே தவிர, மனித உரிமை மீறல் என அறுதியிட்டுக் கூறமுடியாது. ஏனெனில், ஒருகுற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட வர்களது முன்கூட்டிய விடுதலை என்பது ஆட்சி நிர்வாகத்தின் முடிவு என்பதால் அதில் மனிதஉரிமைகள் மீறலுக்கு உட்படுத்துவதில் சிக்கல்கள் உண்டு. தண்டனைக் காலத்தில் நளினி அவரது குழந்தையை சந்திக்க அனுமதிக்கப்படாதது போன்ற மனித உரிமை மீறல்கள் என்பது வேறு விஷயம்.
இதுபோன்ற விவகாரத்தில் ஆட்சி நிர்வாகம் அல்லது நீதிமன்றங்களில் எதுவும் சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனவா?
அப்படி எதுவும் இல்லை என்பதால்தான் இந்தப் பிரச்சினையே. இனியாவது முன்கூட்டியே விடுதலை, கருணை மனுக்களை எதன் அடிப்படையில் முடிவு எடுப்பது என ஆட்சியாளர்கள் ஒரு சட்டம் இயற்றி முறைப்படுத்துவது அவசியம். அப்படி இல்லை எனில், உச்ச நீதிமன்றமாவது அதற்காக ஒருவிதிமுறையை வகுக்க வேண்டும். இதற்கு முன், முன்பு போல இல்லாமல் ஆயுள் தண்டனை என்பது ஒரு குறிப்பிட்ட வழக்குகளில் எத்தனை ஆண்டுகளுக்கு என உச்ச நீதிமன்றம் வரையறுத்திருந்தது. அப்போதுதான் இது போன்ற வழக்குகள் ஒருவேளை எதிர்காலத்தில் வந்தால் பிரச்சினை இன்றி முடிக்க முடியும். அதற்கு ஏழு பேர் விடுதலை ஒரு தூண்டுதலாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT