Published : 31 Jan 2021 04:23 PM
Last Updated : 31 Jan 2021 04:23 PM
திரிணமூல் காங்கிரஸ் ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி; பிப்ரவரி 28 க்குள் யாரும் அக்கட்சியில் இருக்க மாட்டார்கள் என்று சுவேந்து ஆதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திரிணமூலை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்று பாஜக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரை பாஜக தன் வசம் இழுத்து வருகிறது.
சமீபத்தில் மிட்னாபூருக்கு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா வந்திருந்தார். அமித் ஷா முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 34 பேர் பாஜகவில் இணைந்தனர். இதில் ஒரு எம்.பி., 8 எம்எல்ஏக்கள் அடங்கும்.
நேற்று (சனிக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முகுல் ராய் மற்றும் கைலாஷ் விஜயவர்ஜியா ஆகியோர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் மேற்கு வங்க அமைச்சர் ராஜீப் பானர்ஜி, எம்எல்ஏக்கள் பைசாலி டால்மியா மற்றும் பிரவீர் கோஷல், முன்னாள் ஹவுரா மேயர் ரதின் சக்ரவர்த்தி மற்றும் பெங்காலி நடிகர் ருத்ரனீல் கோஷ் ஆகியோரும் புதுடெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சரின் இல்லத்தில் பாஜகவில் இணைந்தனர்.
இதுவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி., இடதுசாரி கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹவுரா நகரில் உள்ள துமூர்ஜாலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கலந்துகொண்டார்.
இதில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரி பேசுகையில், " திரிணமூல் கட்சியிலிருந்து பலரும் விலகி வந்துவிட்டனர். கிட்டத்தட்ட முழுமையாகவே அங்கிருந்து விலகி பாஜகவுக்கு வந்துவிடுவார்கள். இனிமேல் திரிணாமூல் காங்கிரஸ் என்பது ஒரு கட்சியாக இருக்காது. அது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி. பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் டிஎம்சி பிரைவேட் லிமிடெட் கம்பெனி காலியாகிவிடும், யாரும் அங்கிருக்க விரும்ப மாட்டார்கள்'' என்று தெரிவித்தார்.
பாஜகவில் இணைந்த பின்னர் தனது முதல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராஜீப் பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் எங்களுக்கு இரட்டை இயந்திர அரசாங்கம் வேண்டும். சோனார் பங்களாவுக்கான மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டிலும் பாரதிய ஜனதா கட்சி வேண்டும்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT