Published : 30 Jan 2021 03:10 PM
Last Updated : 30 Jan 2021 03:10 PM
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு வீட்டுக்கு ஒருவரை அனுப்பி வைக்க பஞ்சாப் கிராமம் முடிவு செய்துள்ளது.
அப்படி அனுப்பி வைக்க மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25-ம் தேதி வரை விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
டெல்லி எல்லையில் காஸிபூர், சிங்கு, திக்ரித் உட்பட விவசாயிகள் பேராட்டம் நடைபெறும் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.
இந்நிலையில் பஞ்சாபின் பதிந்தா மாவட்டத்தைச் சேர்ந்த விர்க் குர்த் கிராம பஞ்சாயத்து, டெல்லி எல்லையில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு உறுப்பினராவது அனுப்பி வைப்பததென முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து விர்க் குர்த் கிராம பஞ்சாயத்துத் தலைவர் மஞ்சித் கவுர் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
டெல்லி எல்லையில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு உறுப்பினராவது அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளோம்.
போராட்டங்களுக்கு செல்ல மறுப்பவர்களுக்கு ரூ .1,500 அபராதம் விதிக்கப்படும், அபராதம் செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குர்த் கிராம பஞ்சாயத்துத் தலைவர் தெரிவித்தார்.
அணிஅணியாய் திரண்டு வரும் விவசாயிகள்
குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது டெல்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் அணிஅணியாய் திரண்டுவர முடிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகளின் ஒற்றுமையை காட்டவும், காசிப்பூர் எல்லை (டெல்லி-உத்தரபிரதேசம்) எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்று உடன் போராடுவதற்காக விவசாயிகளை அணிதிரட்டும் மகாபஞ்சாயத்துக்கள் நடைபெற உள்ளன.
மதுராவின் நவுஜீல் பஜ்னாவில் உள்ள மோர்கி இன்டர் கல்லூரியில் 120 கிராம விவசாயிகள் கொண்ட ஒரு மகாபஞ்சாயத்து நடைபெறும். இதில் ராஷ்டிரிய லோக் தளம் துணைத் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பங்கேற்கவுள்ளார்.
பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் திகம்பர் ஜனவரி 31 -ம் தேதி பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நுமைஷ் மைதானத்தில் ஒரு மகாபஞ்சாயத்து நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிகைத் சனிக்கிழமை ஏஎன்ஐயிடம் கூறுகையில், "பாக்பத்தில் ஒரு மகாபஞ்சாயத்து கலந்துகொண்டுவிட்டு நாளை டெல்லிக்கு பயணிப்போம். விவசாயிகள் பெயரில் நடக்கும் பஞ்சாயத்தில் நடப்பு அரசியல் விவாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT