Published : 29 Jan 2021 06:41 PM
Last Updated : 29 Jan 2021 06:41 PM
குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் ஊர்வல வன்முறைக்குப் பின் காஜிபூர் எல்லையின் போராட்டக் களம் காலியானது. அங்கிருந்த பாரதிய கிஸான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாய்த் அழுகுரலுடன் ஆவேசமாக விடுத்த அழைப்பின் எதிரொலியாக மீண்டும் காஜிபூரில் விவசாயிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அமைதியாக நடந்த இந்தத் தொடர் போராட்டத்தில், குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.
செங்கோட்டையில் அத்துமீறி ஏற்றப்பட்ட சீக்கியர்களின் மதக்கொடியால் அப்போராட்டம் திசை திரும்புவதாகக் கருதி விவசாயிகள் பலரும் வீடு திரும்பத் தொடங்கினர். குறிப்பாக உ.பி.யின் டெல்லி எல்லையான காஜிபூரின் போராட்டக் களம் பெரும்பாலும் காலியானது. இதனால், அங்கு தலைமை வகித்த பிகேயூவின் தலைவரான ராகேஷ் திகாய்த் அதிர்ச்சி அடைந்தார். இதன் பின்னணியில் மத்திய அரசின் சதி இருப்பதாகப் புகார் எழுப்பினார்.
இதுகுறித்துத் தலைவர் ராகேஷ் திகாய்த் நேற்று நள்ளிரவில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசுகையில், ''விவசாயிகளை நசுக்கப் பார்க்கிறது மத்திய அரசு. இதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்துவோம். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவில்லை எனில் நான் இங்கேயே எனது உயிரை மாய்த்துக் கொள்வேனே தவிர இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன். எனது விவசாய உறவுகளே மத்திய அரசின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு போராட்டத்திற்குத் திரும்புங்கள்'' எனக் கண்ணீர் மல்க அழுகுரலுடன் தெரிவித்தார்.
இவ்வாறு உணர்சிகரமாகக் கண்ணீர் மல்க திகாய்த் பேசிய வீடியோ பதிவு நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து உத்தரப் பிரதேச விவசாயிகள் பலரும் காஜிபூர் போராட்டக் களத்திற்கு திரும்பத் தொடங்கினர். அதேசமயம், ராகேஷ் திகாய்த்தின் அழுகுரலின் தாக்கமாக அவரது சொந்த ஊரான உ.பி.யின் முசாபர் நகரில் மஹா பஞ்சாயத்து கூடியது. ராகேஷின் சகோதரரான பிகேயுவின் மற்றொரு தலைவர் நரேஷ் திகாய்த் இப்பஞ்சாயத்திற்குத் தலைமை வகித்தார்.
இதில், உ.பி.யின் மேற்குப்பகுதி மாவட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் ஆம் ஆத்மி என அரசியல் கட்சிகளும் தங்கள் சார்பில் தலைவர்களை அனுப்பிப் பேச வைத்தனர். சிசோலி கிராமத்தில் கூடிய இப்பஞ்சாயத்தில், இதுவரை இல்லாத வகையில் மாபெரும் கூட்டம் கூடியதாகக் கருதப்படுகிறது. இதில், விவசாயிகள் அனைவரும் மத்திய அரசிற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வது என முடிவு எடுத்துள்ளனர்.
முசாபர் நகரிலிருந்து காஜிபூர் வரை டிராக்டர்களில் ஊர்வலமாகச் சென்று போராட்டக் களத்தில் குதிப்பது என்றும் உறுதி பூண்டுள்ளனர். இதன் காரணமாக, குடியரசு தினத்தன்று மாலை முதல் வெறிச்சோடிய காஜிபூர் போராட்டக்களம் மீண்டும் களைகட்டத் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து மஹாபஞ்சாயத்தில் பிகேயூவின் மற்றொரு தலைவரான நரேஷ் திகாய்த் கூறும்போது, ''காஜிபூரில் எங்கள் போராட்டத்தை மத்திய அரசு தடுக்க நினைத்தால் எங்களின் பல நூறு சடலங்கள் மீதுதான் செய்ய முடியும். பாஜக அரசுக்கு 2022 மற்றும் 2024 தேர்தல்களில் விவசாயிகள் பாடம் புகட்டுவார்கள். இது எங்கள் மஹா பஞ்சாயத்தின் முடிவாகும்'' எனத் தெரிவித்தார்.
டெல்லியில் போராட்டம் ஹரியாணா எல்லையான சிங்கு, டிக்ரி, உ.பி. எல்லையான காஜிபூர் மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில், பஞ்சாபிலிருந்து அதிகமாகக் குவிந்திருந்த விவசாயிகள் காரணமாக சிங்கு எல்லையின் போராட்டக் களம் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.
எனினும், பிகேயூவின் தலைவர் ராகேஷ் திகாய்த்தின் ஆவேசக் குரலுக்குப் பின் சிங்குவை விட அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் காஜிபூரில் குவியத் தொடங்கி உள்ளனர். எனவே, விவசாயிகளின் போராட்டம் மீண்டும் முன்பு போல் தொடரத் தொடங்கியது.
குடியரசு தின வன்முறைக்குப் பிறகு விவசாயிகள் போராட்டம் முடிவிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உ.பி. மாநில விவசாயிகளால் இப்போராட்டம் புதிய திருப்பத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT