Published : 29 Jan 2021 04:35 PM
Last Updated : 29 Jan 2021 04:35 PM
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் மைனஸ் 7.7 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தாலும், 2021-22ம் நிதியாண்டில் 11 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும் நடக்கும். அதன்பின் மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை 2-வது அமர்வு நடக்க உள்ளது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும் 18 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை இன்று புறக்கணித்தன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை முடிந்தபின், பொருளாதார ஆய்வறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.
தலைமைப் பொருளதாார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் தயார் செய்த பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்த ஆண்டு பொருளதார ஆய்வறிக்கை கரோனா வைரஸில் முன்களத்தில் போராடிய மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் என கரோனா போர்வீரர்களுக்கு சமர்பிக்கிறோம்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சரியான நேரத்துக்கு மத்திய அரசு எடுத்ததாலும், கரோனா போர் வீரர்களின் செயல்பாட்டாலும், 37 லட்சம் பேர் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது, ஒரு லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.
கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கொண்டுவரப்பட்டு தற்போது வழங்கப்பட்டதன் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சி சந்தையில் உருவாகும். சேவைத்துறையில் அபரிமிதமான வளர்ச்சி, நுகர்வு மற்றும் முதலீட்டிலும் அபரிமிதமான வளர்ச்சி காணப்படும்.
அதிகமான மின்நுகர்வு, சரக்குரயில் போக்குவரத்து அதிகரிப்பு, இ-வே பில், ஜிஎஸ்டி வரிவசூல் அதிகரிப்பு, உருக்கு நுகர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சந்தையில் பொருளாதாரம் விரைவாக மீண்டுவருகிறது தெரிகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் நடப்பு நிதியாண்டில் 2020-21ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.7 சதவீதமாக வீழ்ச்சி அடையும். கடைசியாக 1979-80ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 5.2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. அதன்பின் இப்போது மைனஸில் பொருளாதார வளர்ச்சி செல்கிறது.
வேளாண் துறை 3.4 சதவீதம் வளர்ச்சியும், தொழில்துறையில் மைனஸ் 9.6 சதவீதமும் மற்றும் சேவைத்துறையில் மைனஸ் 9.6 சதவீதம் வீழ்ச்சியும் இருக்கும். கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை முதல்முறையாக நடப்பு நிதியாண்டில் 2 சதவீதம் உபரியாக இருக்கும்.
வரும 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT