Published : 29 Jan 2021 09:57 AM
Last Updated : 29 Jan 2021 09:57 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தாமதமாக தொடங்கி, முன் கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வில்லை. இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரை நடக்கிறது. 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதன்பிறகு இரண்டாம் அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்க 18 கட்சிகள் முடிவு செய்துள்ளன.
காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மதிமுக, கேரள காங்கிரஸ் (எம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் சார்பில் கூட்டறிக்கையும், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம் தனித்தனியாகவும் தங்கள் முடிவை தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும். அனைத்து பிரச் சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா பிரச்சினை, விவசாயிகள் போராட்டம் போன்றவற்றால் மத்திய அரசு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT