Published : 17 Nov 2015 09:34 AM
Last Updated : 17 Nov 2015 09:34 AM
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஆந்திராவில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 4,500 ஏரிகள் நிரம்பியுள்ளன. 12 ஏரிகள் உடைப் பெடுத்ததில், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதையடுத்து பல மாவட் டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. சித்தூர், நெல்லூர், கடப்பா, நெல்லூர், குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட் டங்களில் கனமழை காரணமாக அனைத்து ஏரிகளும், அணைகளும் நிரம்பின.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள 12,500 ஏரிகளில் 4,500 ஏரிகள் நிரம்பி கிராமங்களில் வெள்ள நீர் அடித்து சென்றது. 12 ஏரிகள் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்ததால் நூற்றுக்கணக்கான குடிசைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சுவர்ணமுகி நதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக நதியோரம் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்குள் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. கோயில் சுவர்களிலும், கல் தூண்களிலும் மழைநீர் கசிந்தது. யாகசாலை, கொடி கம்பம், நாயன்மார்கள் சன்னிதி, அம்மன் சன்னிதிகளில் மழைநீர் புகுந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலை சுற்றிலும் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. திருமலையில் உள்ள அனைத்து தீர்த்தங் களிலும் நீர் வரத்து அதிகரித்தது. கோகர்பம், பாபவிநாசம் அணைகள் நிரம்பியதால், 2 மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் குமாரதாரா, பசுபுதாரா அணைகளும் நிரம்பின. தொடர் மழை காரணமாக திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் 2வது மலைப்பாதையில் 12வது மைலில் நேற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் நடைபாதையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.
நெல்லூர், கடப்பா, குண்டூர், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல இடங்களில் ஏரிகள் உடைந்தன. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பல குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தால் வீடு இழந்தவர்கள் அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ள நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு காணொலி மூலம் நிலவரங்களை கேட்டறிந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT