Published : 28 Jan 2021 05:56 PM
Last Updated : 28 Jan 2021 05:56 PM
2021-22ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பத் திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டுக் கூட்டத்தொடருடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆனால், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், டெல்லியில் நடந்த கலவரம் குறித்து சார்பற்ற விசாரணை நடத்தக் கோரியும், நாளை குடியரசுத் தலைவர் உரையை 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, சிவசேனா, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன.
இந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடர் காகிதமில்லாத பட்ஜெட் கூட்டத்தொடராக அமையப்போகிறது. பட்ஜெட் தொடர்பான அனைத்து ஆவணங்கள், பொருளாதார ஆய்வறிக்கை போன்றவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தொடங்கியதும், எம்.பி.க்களுக்கு ஆன்லைன் மூலம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவலுக்கு இடையே மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் காலை நேரத்தில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் செயல்பட்டன. அவ்வாறு செயல்பட்டபோதிலும் எம்.பி.க்கள் பலர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதனால் முன்கூட்டியே கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த மழைக்காலக் கூட்டத்தில் நேரம் கருதி கேள்வி நேரமும் ரத்து செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் கேள்வி நேரம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை வார விடுமுறை நாட்களில் நாடாளுமன்றம் செயல்படாது. தனிநபர் மசோதாக்கள் வழக்கமாக வெள்ளிக்கிழமை மாலை எடுக்கப்படும். இந்த முறையும் அதேபோன்று எடுக்கப்படும். ஆனால், மழைக்காலக் கூட்டத்தொடரில் தனிநபர் மசோதாக்கள் எடுக்கப்படவில்லை.
இந்த முறை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. நாளை தொடங்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும் நடக்கும். அதன்பின் மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை 2-வது அமர்வு நடக்க உள்ளது.
கடந்த சில மாதங்களாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டங்கள் காலாவதியாகிவிடும் என்பதால், இந்தக் கூட்டத்தொடரில் அதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற முயலும். அந்த வகையில் தலைநகர் மண்டலம் மற்றும் தொடர்பான பகுதிக்கு காற்று மேலாண்மை ஆணையம் அமைத்தல், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு அவசரச் சட்டம் உள்ளிட்டவை மசோதாக்களாக தாக்கல் செய்து நிறைவேற்றக்கூடும்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றிய விதம், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் நாடாளுமன்றத்தில் ஈடுபட நேரலாம். டெல்லியில் நடந்த கலவரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை அளித்தல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT