Last Updated : 27 Jan, 2021 02:27 PM

1  

Published : 27 Jan 2021 02:27 PM
Last Updated : 27 Jan 2021 02:27 PM

இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது டிக்டாக்: ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் மூடுகிறது சீன நிறுவனம்

கோப்புப்படம்

புதுடெல்லி

மத்திய அரசு விதித்த தடை மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து டிக்டாக், ஹெலோ செயலி நடத்தும் சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது.

இந்தியாவில் அனைத்து வர்த்தகத்தையும் முடித்துவிட்டதாக பைட்டான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா, சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்குப்பின் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடுமை காட்டத் தொடங்கியது.

இந்தியர்களின் சுயவிவரங்கள், தகவல்களைப் பெற்று பல்வேறு இடங்களுக்கு பரிமாறுவதாக எழுந்த புகார்கள் , குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் டிக்டாக், ஹலோ, ஷேர்இட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பின் ஜூலை மாதத்தில் மேலும் 50 சீன செயலிகளுக்கு தடை விதித்து, ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட செயலிகளின் செயல்பாட்டை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் மத்திய அரசின் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட விருப்பம் இருப்பதாகவும், அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு செயல்படுவதாக டிக்டாக் செயலி நடத்தும் பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஆனாலும், கடந்த 7 மாதங்களாக மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான சாதகமான நடவடிக்கையும் இல்லை என்பதால், வேறுவழியின்றி தங்கள் வர்த்தகத்தை இந்தியாவில் முடித்துக்கொள்ள பைட்டான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டிக்டாக் நிறுவனத்தின் இடைக்காலத் தலைவர் வனேசா பாப்பாஸ், உலக வர்த்தகத் தலைவர் பிளேக் சான்ட்லீ இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மின்அஞ்சல் மூலம் தங்கள் வர்த்தகத்தை இந்தியாவில் முடித்துக்கொள்வதாகவும், பெயரளவுக்கு நிறுவனத்தை மட்டும் நடத்தவும், ஊழியர்கள் அளவையும் குறைக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவு இந்தியாவில் அனைத்து ஊழியர்களையும் கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் மீண்டும் பைட்டான்ஸ் நிறுவனம் வருவதில் நிலையற்ற, நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. மீண்டும் வருவோமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல நேரம் வரும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

டிக்டாக் செயலின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ இந்தியஅரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட விருப்பமாக இருந்தோம். கடந்த 2020, ஜூன் 29-ம் தேதி பிறப்பித்த விதிமுறைகளுக்கு உட்பட்ட தொடர்ந்து நடக்கிறோம் எனத் தெரிவித்திருந்தோம்.

ஆனால் 7 மாதங்களாகியும் எந்தவிதமான தெளிவான வழிகாட்டலும் மத்திய அரசிடம் இல்லை, எப்போது எங்கள் செயலி மீண்டும் செயல்பாட்டுக்குவரும் என்பது குறித்து தெளிவு இல்லை. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கிவிட்டு, 2 ஆயிரம் பேரையும் வேலையைவிட்டு நீக்குவதும் நிறுவனத்தை மூடுவதும் வருத்தமளிக்கிறது. எங்களுக்கு வேறு வழியில்லை, அதனால் ஊழியர்களை குறைக்கிறோம்.

லட்சக்கணக்கான பயனாளிகள், கதைசொல்லிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள் ஆதரவோடு செயல்பட்டு வந்த டிக்டாக் மீண்டும் செயல்பாட்டு வரும் வாய்பை எதிர்நோக்கி இருக்கிறோம். இந்திய அரசின் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்பட்டும் இந்தத்தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x