Last Updated : 26 Jan, 2021 02:50 PM

10  

Published : 26 Jan 2021 02:50 PM
Last Updated : 26 Jan 2021 02:50 PM

லாக்டவுன் காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரிப்பு; 14 கோடி ஏழைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கலாம்: ஆய்வில் தகவல்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி: கோப்புப் படம்.

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.12 லட்சத்து 97 ஆயிரத்து 822 கோடி அதிகரித்துள்ளது என ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாக்டவுன் காலகட்டத்தில் கோடீஸ்வரர்களிடம் அதிகரித்த ரூ.12.97 லட்சம் கோடி சொத்துகளை 13.80 கோடி ஏழைகளுக்குத் தலா ரூ.94 ஆயிரம் வழங்க முடியும் என ஆய்வு தெரிவிக்கிறது.

உலகப் பொருளாதார மாநாடு நேற்று தொடங்கியது. இதையொட்டி, ஆக்ஸ்ஃபாம் நிறுவனம், சமநிலையற்ற சமூகத்தை உருவாக்கிய வைரஸ் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''லாக்டவுன் காலத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில் செய்ததை, திறனற்ற தொழிலாளி செய்ய 10 ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும். முகேஷ் அம்பானி ஒரு வினாடியில் செய்ததை எளியவர்கள் செய்ய 3 ஆண்டுகள் தேவைப்படும்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத சுகாதாரப் பிரச்சினைகளை கரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டது. இந்த கரோனா வைரஸ் உருவாக்கிய பொருளாதாரச் சிக்கல், கடந்த 1930-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப் பெருமந்தத்தோடு ஒப்பிடலாம்.

79 நாடுகளில் உள்ள 295 பொருளாதார வல்லுநர்கள், நடத்திய ஆய்வில் ஜெப்ரி சாஸ் (அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்), ஜெயதி கோஷ் (இந்தியப் பொருளாதார வல்லுநர்) கேப்ரியல் ஜூமான் (பிரான்ஸ்) ஆகியோர் உள்பட பலரும் கூறிய கருத்தில் தங்கள் நாடுகளில் கரோனாவால் சமூகத்தில் வருமான ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரம், மருத்துவ வசதிக்குக் குறைந்த அளவில் நிதி ஒதுக்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் முதல் 11 இடங்களில் இருக்கும் கோடீஸ்வரர்களின் சொத்து, கரோனா காலத்தில் அதிகரித்த அளவுக்கு குறைந்தபட்சமாக ஒரு சதவீதம் வரி விதித்தாலே மத்திய அரசின் ஜன் அவுஷதி திட்டத்துக்கு 140 மடங்கு நிதி ஒதுக்க முடியும்.

இந்த ஜன் அவுஷதி திட்டம் என்பது ஏழை மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் மிகக் குறைந்தவிலையில் மருந்து மாத்திரைகள் வழங்கும் மத்திய அரசின் கடைகளாகும்.

இந்திய அரசு கொண்டுவந்த கடினமான லாக்டவுனாலும், கட்டுக்கோப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டதாலும், நாட்டில் வேலையின்மை, பட்டினி, மக்கள் இடப்பெயர்வு, வெளியே சொல்ல முடியாத துயரங்கள் எழுந்துவிட்டன.

இந்த பாதிப்பில் இருந்து பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் தப்பித்துவிட்டார்கள். உயர்ந்த பதவியில் இருப்போர், பெரிய அலுவலகங்களில் அதிகமான ஊதியத்தில் இருப்போரும், வீட்டிலிருந்து பணியாற்றுவோரும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டுவிட்டனர். ஆனால், துரதிர்ஷ்டமான இந்தியர்கள் கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டார்கள்.

கவுதம் அதானி, ஷிவ் நாடார், சைரஸ் பூனாவல்லா, உதய் கோட்டக், அசிம் பிரேம்ஜி, சுனில் மிட்டல், ராதாகிருஷ்ண தாமணி, குமாரமங்கலம் பிர்லா, லட்சுமி மிட்டல் ஆகியோரின் சொத்து 2020-ம் ஆண்டு மார்ச்சிலிருந்து அதிகரித்துள்ளது.

லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.12 லட்சத்து 97 ஆயிரத்து 822 கோடி அதிகரித்துள்ளது. லாக்டவுன் காலகட்டத்தில் கோடீஸ்வரரிடம் அதிகரித்த ரூ.12.97 லட்சம் கோடி சொத்துகளை 13.80 கோடி ஏழைகளுக்குத் தலா ரூ.94 ஆயிரம் வழங்க முடியும்

அதேசமயம், 2020, ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு 1.70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். புள்ளிவிவரங்கள்படி, அம்பானி கரோனா லாக்டவுன் காலத்தில் ஈட்டிய தொகை, அமைப்புசாரா துறையில் உள்ள 40 கோடி பணியாளர்களை வறுமையில் தள்ளும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து 42,290 கோடி டாலர் அதிகரித்துள்ளது. உலக அளவில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

இந்திய கோடீஸ்வரர்களில் முதல் 11 இடங்களில் இருப்போரின் சொத்துகள் கரோனா லாக்டவுன் காலத்தில் உயர்ந்த அளவை மட்டும் வைத்துக்கொண்டு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கலாம் அல்லது சுகாதாரத் துறைக்கு 10 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கலாம்.

அமைப்புசாரா துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12.20 கோடி மக்கள் வேலையிழந்துள்ளார்கள். இதில் 75 சதவீதம் அதாவது 9.20 கோடி வேலை, அமைப்பு சாரா துறையாகும்.

2020 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 17 கோடி பெண்கள் வேலையிழந்துள்ளார்கள். லாக்டவுனுக்கு முன், பெண்களிடையே இருந்த வேலையின்மை அளவு தற்போது 15 சதவீதம் அதிகரித்துள்ளது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து ஆக்ஸ்ஃபாம் இந்தியா சிஇஓ அமிதாப் பெஹர் கூறுகையில், “இந்தியாவில் தற்போது நிலவும் பிரச்சினைகளை உடனடியாகக் களையாவிட்டால், பிரச்சினைகள் மேலும் மோசமாகும். அதிகப்படியாகச் சமத்துவமின்மை ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆனால், கொள்கையின் விருப்பமாக இருக்கிறது. சமத்துவமின்மைக்கு எதிராகப் போரிடுவதுதான் பொருளாதாரச் சீரமைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையின் முக்கியமாக இப்போது இருக்கும். உறுதியான நடவடிக்கைகள் மூலம் சிறந்த எதிர்காலத்தையும், சமத்துவத்தையும் , ஒவ்வொருவருக்கும் நல்ல எதிர்காலத்தையும் அமைக்க இந்தியாவுக்கு இது சரியான காலம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x