Published : 26 Jan 2021 12:42 PM
Last Updated : 26 Jan 2021 12:42 PM
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் இன்று நடந்துவரும் டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.
டெல்லி முபாரக் சவுக் பகுதியில் போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் உள்ளே வர முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், கூட்டத்தினரைக் கலைக்க கண்ணீர் புகைகுண்டுகளை போலீஸார் வீசினர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தை விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.
இதையடுத்து குடியரசு தினத்தன்று டெல்லியின் புறநகர் எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி, சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லைகளில் இருந்து காலை முதல் விவசாயிகள் தேசியக் கொடியை டிராக்டரில் கட்டிக்கொண்டு டெல்லியை நோக்கி வந்தவாறு உள்ளனர்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி மத்திய டெல்லிக்குள் செல்லாத வகையில் பல்வேறு இடங்களில் போலீஸார் தடுப்புகளை அமைத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இன்று காலை திக்ரி எல்லையில் போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். அதன்பின் முபாரக் சவுக் பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி போக்குவரத்து நகரில் விவசாயிகள் கூடினர். அங்கு போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் செல்ல முயன்றனர்.
மேலும், போலீஸார் அங்கு நிறுத்தியிருந்த அதிரடிப்படை வாகனங்கள் மீது ஏறி விவசாயிகள் நுழைய முயன்றனர். தடுக்க முயன்றபோது, போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த பிற்பகல் 12 மணிக்கு மேல் போலீஸார் அவகாசம் அளித்திருந்தார்கள். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக விவசாயிகள் வந்ததே குழப்பத்துக்குக் காரணம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, தள்ளுமுள்ளுவைத் தவிர்க்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.
கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் அமைப்பின் தலைவர் சத்னம் சிங் பன்னு கூறுகையில், “திக்ரி எல்லையில் வந்த எங்களை ரிங்ரோடு பகுதிக்குச் செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. முபாரக் சவுக் பகுதியிலேயே தடுப்புகளை அமைத்துத் தடுக்கிறார்கள். அமைதியான முறையில்தான் பேரணி நடக்கிறது. போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்
போலீஸ் இணை ஆணையர் எஸ்.எஸ்.யாதவ் கூறுகையில், “போலீஸாருடன் விவசாயிகள் ஒத்துழைத்து வருகிறார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லை” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...