Published : 26 Jan 2021 10:45 AM
Last Updated : 26 Jan 2021 10:45 AM
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அதே 77 தொகுதிகளில் மீண்டும் போட்டியிட காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே நேற்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகுதிகளுக்கு இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும்.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில், கட்சிப் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளிக்கும் வகையில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. இதுவரை 15க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குச் சென்றுள்ளனர்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி முடிவாகியுள்ளதால், இரு கட்சிகளும் ஒன்றாகக் களம் காண்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இது பெரும் பின்னடைவை இரு கட்சிகளுக்கும் ஏற்படுத்தியது. இரு கட்சிகளின் ஆதரவாளர்களும், அதிருப்தியாளர்களும் பாஜகவுக்கு வாக்களித்ததால், 18 இடங்களில் பாஜக வென்றது.
இந்தச் சூழலில் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற 77 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே நேற்று உடன்பாடு ஏற்பட்டது.
கடந்த 2016-ல் இரு கட்சிகளும் சேர்ந்து 77 இடங்களில் வென்றன. காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 33 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் இந்தத் தேர்தலில் இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதிப் பட்டாச்சார்யா நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த 2016-ல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வென்ற 44 மற்றும் 33 தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 217 தொகுதிகளுக்கு இரு கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கும்.
இந்த மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடியும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமான் போஸ் கூறுகையில், “இரு கட்சிகளும் தேர்தலில் இணைந்து பிரச்சாரம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் இடையே 77 இடங்கள் முதல் கட்டமாக உறுதி செய்யப்பட்டு இருப்பதே மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. பல்வேறு முட்டுக்கட்டைகள் இருந்தாலும் தொகுதிப் பங்கீடு நல்லபடியாகத் தொடங்கியுள்ளது. இரு கட்சிகளுக்கும் இருக்கும் வாக்கு சதவீதம் அடிப்படையில் மீதமுள்ள 217 இடங்களுங்களுக்கான தொகுதிப் பங்கீடு இருக்கும் என கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT