Published : 26 Jan 2021 07:55 AM
Last Updated : 26 Jan 2021 07:55 AM
பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலின்போது, நாடாளுமன்றம் நோக்கி பல்வேறு இடங்களில் இருந்து பேணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் குடியுரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் நிலையில், பட்ஜெட் தாக்கலின்போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி எனும் அடுத்தகட்ட போராட்டத்தை விவாசாயிகள் அறிவித்துள்ளனர்.
கிாரந்திகாரி கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த தர்ஷன் பால் கூறுகையில் “ மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில், அதாவது பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பல்ேவறு இடங்களில் இருந்து பேரணி நடத்தப்படும்.
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்த உள்ளனர்.எங்கள் ஒற்றுமையின் வலிமையை அரசுக்கு இந்த பேரணி உணர்த்தும். பஞ்சாப், ஹரியானாவுடன் எங்கள் போராட்டம் முடிந்துவிடவில்லை, நாடு முழுவதும் நீடிக்கிறது என்பதை தெரிவிக்கவே இந்த டிராக்டர் பேரணி. இந்தப் பேரணி எந்த விதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடத்தப்படும்.
டிராக்டர் பேரணிக்காக வரும் விவசாயிகள் திரும்பிச் செல்லமாட்டார்கள், அவர்கள் போராட்டத்திலும் பங்கேற்பார்கள். எங்கள் கோரி்க்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும். எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை” எனத் தெரிவித்தார்.
குடியரசு தினத்தன்று ராஜபாதையில் அணிவகுப்பு வாகனங்கள் ஊர்வலம் நடைபெற உள்ளதால், வரலாறுகாணாத பாதுகாப்பு பல்வேறு எல்லைப்பகுதிகளில் போடப்பட்டுள்ளது. பல்ேவறு அடுக்கு பாதுகாப்புகளும், ராஜபாதைக்குச் செல்லும் வழியில் போடப்பட்டுள்ளது.
விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி, குடியரசு தின அணிவகுப்பு முடிந்தபின், மத்திய டெல்லி பகுதிக்குள் வராமல் புறநகர் டெல்லி எல்லையைச் சுற்றியே நடக்கும். இந்தப் பேரணியில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் என விவசாயிகள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். சிங்கு, சிக்ரி, காஜிப்பூர் ஆகிய இடங்களில் இந்த பேரணி நடக்கும்.
பாரதிய கிசான் யூனியன் மூத்த தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறுகையில் “இந்திய ஜனநாயகத்தில் டிராக்டர் பேரணி முக்கிய நிகழ்வாக இருக்கும். குடியுரசு தினத்தை புதிய உற்சாகத்தோடு நாங்கள் கொண்டாடப்போகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தில் அடிக்கடி திருத்தம் செய்து, அரசியல்வாதிகள் விளையாடி, தொடர்ந்து மனித உரிமைகளை மீறுகிறார்கள். அதைசீரமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுப்போம்.
இந்த அ ரசியலமைப்புச் சட்டம்தான், 3 வேளாண்சட்டங்களை கொண்டு வந்து, விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், தேசத்தின் மக்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் விவசாயிகள் டெல்லி எல்லையில் 2 மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டங்களை அரசு திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT