Published : 26 Jan 2021 06:59 AM
Last Updated : 26 Jan 2021 06:59 AM
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர் களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட் டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.
குடியரசு தின நாளில் டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீஸார் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லைப் பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவு மட்டுமே டிராக்டர் பேரணி நடத்த வேண்டும். திக்ரி எல்லையில் இருந்து 63 கி.மீ., சிங்கு எல்லையில் இருந்து 62 கி.மீ., காஜிபூர் எல்லையில் இருந்து 46 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்தலாம். பேரணியில் 5 ஆயிரம் டிராக்டர்கள் மட்டுமே பங் கேற்க வேண்டும். ஒரு டிராக்டரில் 3 பேர் முதல் 5 பேர் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 37 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், டெல்லி எல்லைப் பகுதி களில் நேற்றைய நிலவரப்படி ஆயிரக் கணக்கான டிராக்டர்கள் குவிந்துள் ளன. சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் டிராக்டர்கள் டெல்லியை வந்தடை யும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடைகள் மூடப்படும்
இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் கூறும்போது, ‘‘டெல்லியில் 3 வழித்தடங்களில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூகவிரோதிகளால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள் ளோம்’’ என்று தெரிவித்தார்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘எல்லைப் பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் இடங்களில் அனைத்து கடைகளும் பேரணியின்போது மூடப்படும். சாலை, தெருக்களில் போலீஸாரும் விவசாயிகளும் மட்டுமே இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.
விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத் கூறும்போது, ‘‘செங் கோட்டை வரை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், போலீஸார் அனுமதி வழங்கவில்லை. தற்போது வெளிவட்டச் சாலை வழியாக பேரணி நடத்த ஒப்புக் கொண்டுள்ளோம். அதிலும் மாற்றம் செய்ய போலீஸார் கோருகின்றனர். இதை ஏற்க முடியாது. 3 வழித்தட பாதைகளில் எங்களுக்கும் போலீ
ஸாருக்கும் இடையே கருத்து வேறு பாடுகள் உள்ளன. இதுதொடர்பாக போலீஸாருடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். நாங்கள் அமைதியான முறையில் பேரணி நடத்துவோம். எங்கள் தரப்பில் 1,000 பேர் பேரணியை ஒழுங்குபடுத்துவர். டிராக்டரில் தேசி யக் கொடி, விவசாய சங்கங்களின் கொடியை பறக்கவிடுவோம்’’ என்று தெரிவித்தார்.
விவசாய சங்க தலைவர் கவிதா குருகந்தி கூறும்போது, ‘‘புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக நடந்து செல்வோம்’’ என்று தெரிவித்தார்.
அமைச்சர் நம்பிக்கை
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டெல்லியில் நேற்று கூறியதாவது:
குடியரசு தினத்துக்கு பதிலாக வேறு நாளில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தியிருக்கலாம். பேரணியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதே எங்களது கவலையாக உள்ளது. மத்திய அரசு தரப்பில் விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு ஒருதரப்பு விவசாயிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களது எண்ணிக்கை குறைவு. எனினும் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் உள்துறைச் செயலாளர், டெல்லி போலீஸ் கமிஷனர், உளவுத் துறை தலைவர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT