Published : 24 Jan 2021 04:58 PM
Last Updated : 24 Jan 2021 04:58 PM
அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்க ரூ.1,100 கோடி செலவாகும், ஏறக்குறைய 3 ஆண்டுகளில் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமியின் தீர்த்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் தெரிவித்தார்.
மும்பையில் ஸ்ரீ ராம ஜென்மபூமியின் தீர்த்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
அயோத்தியில் பிரதான ராமர் கோயில் கட்டி முடிக்க 3 முதல் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இதற்கு மட்டும் ரூ.300 முதல் ரூ.400 கோடி செலவாகும். ஒட்டுமொத்தமாக 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் முழுமையும் கட்டி முடிக்க ரூ.1,100 கோடி செலவாகும்.
ராமர் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வல்லுநர்களிடம் ஆலோசித்தபின் அவர்கள் அளித்த புள்ளிவிவரங்களில் இந்த தொகை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கட்டுமானத்துக்கு தேவையான நிதியை மக்களிடம் இருந்து பெற முடியும் என்று நம்புகிறோம். சில கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய குடும்பத்தார் திட்டத்தை எங்களிடம் ஒப்படையுங்கள், கோயில் கட்டி முடித்து தருகிறோம் என்றனர்.ஆனால், நாங்கள் பணிவுடன் அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டோம்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதிதிரட்டும்போது பாஜக பிரச்சாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்ததில் உண்மையில்லை. மக்கள் என்ன வண்ணத்தில் கண்ணாடிப் போட்டு பார்க்கிறார்களோ அப்படித்தான் தெரியும். நாங்கள் எந்தக் கண்ணாடியும் அணியவில்லை. இதனால் உண்மையான பாதை கண்களுக்குத் தெரிகிறது. எங்கள் இலக்கு 6.5 லட்சம் கிராமங்களை சென்றடைவது, 15 மக்களைச் சந்திப்பதாகும்.
மகாரஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராமர் கோயிலுக்கு நன்கொடை தரவிருப்பமாக இருந்தால், நிச்சயம் அவரை நேரில் சந்திப்பேன், இல்லத்துக்குச் சென்று நன்கொடையைப் பெறுவேன். கடந்த வாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்தார்.
காங்கிரஸ் கட்சியினர் நன்கொடை அளித்தாலும் வாங்குவதற்கு நாங்கள் தயார். சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் நன்கொடை அளிக்க முன்வந்தால் நான் வாங்குவதற்கு தயார். நான் யாரையும் அவமரியாதை செய்யவில்லை
இவ்வாறு ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT