

கரோனா வைரஸ் தடுப்பூசியில் யாரும் அரசியல் செய்யக் கூடாது. அவ்வாறு அரசியல் செய்தால், அது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமி்த் ஷா தெரிவித்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் விழா நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. அசாம் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, குவஹாட்டி நகரில் ேநற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கான ஆயுஷ்மான் திட்டத்தை அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் அமி்த் ஷா பேசியதாவது:
கரோனா வைரஸ் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் செய்வதற்கு பல்வேறு தளங்கள் இருக்கின்றன. ஏன் மக்களின் உடல்நலன் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்கிறீர்கள்.
கரோனா தடுப்பூசிகள் அனைத்தும் நமது விஞ்ஞானிகள் கடின உழைப்பால் உருவானவை. நீங்கள் கரோனா தடுப்பூசியில் அரசியல் செய்தால், அது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும்.
கரோனா வைரஸுக்கு எதிராக இந்த தேசம் கடுமையாக போரிட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்த அரசும், மக்களும் இணைந்து செயல்பட்டார்கள். உலகிலேயே கரோனாவிலிருந்து அதிகமாக மீண்டவர்களும், குறைந்த இறப்பு வீதம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
ஒரு நேரத்தில் 130 கோடி மக்கள் உள்ள தேசத்தில் எவ்வாறு கரோனாவை சமாளிக்கப் போகிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், மத்திய அரசு எடுத்தநடவடிக்கைகளுக்கு மக்களும் அளித்த ஒத்துழைப்பால் இது சாத்தியமானது.
சிஏபிஎப் வீரர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், வீட்டு வசதிகள் போன்றவை உரிய நேரத்தில் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் தங்கள் குடும்பத்தாருடன் வீரர்கள் தங்குமாறு விடுப்பு அளிக்க உறுதி செய்யப்படும்.
உலகிலேயே மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அது வேகப்படுத்தப்பட்டு வருகிறது. போலீஸார், ஆயுதப்படையினர் , மாநில காவல்துறையினர் எந்தவிதமான விருப்பு, வெறுப்பின்றி கரோனா தடுப்பூசிகளை போடுகிறார்கள்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.