Published : 24 Mar 2014 12:00 AM
Last Updated : 24 Mar 2014 12:00 AM

5 நாள்களுக்கு முன்பே பூத் சிலிப் வழங்கப்படும்

வாக்குப் பதிவுக்கு 5 நாள்களுக்கு முன்பே வாக்குச் சாவடி சீட்டுகளை (பூத் சிலிப்) வழங்கிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புகைப்படத்துடன்கூடிய வாக்குச்சாவடி சீட்டுகள் தரமான காகிதத்தில் அச்சிடப்பட வேண்டும். அதில் வாக்காளர் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும். வாக்குச்சாவடி சீட்டில் உள்ள புகைப்படமும் விவரங்களும் சரிதானா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சீட்டுகளை விநியோகிக்கும் அலுவலர் சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக வழங்க வேண்டும். இல்லையெனில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளரிடம் அளிக்கலாம். யாராக இருந்தாலும் வாக்குச்சாவடி சீட்டை பெற்றுக் கொண்டவரிடம் கண்டிப்பாக அத்தாட்சி கையெழுத்துப் பெற வேண்டும்.

வாக்காளர் இல்லாமல் வீடு பூட்டி இருந்தாலோ, வேறு வீட்டுக்கு மாறி இருந்தாலோ, இறந்துவிட்டாலோ அவரது வாக்குச்சாவடி சீட்டில் “ஏ.எஸ்.டி.” என்று முத்திரையிட வேண்டும். வாக்குப் பதிவு நாளில் சம்பந்தப்பட்ட நபர் தனது வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வாக்குச் சாவடி அதிகாரி அதனை சரிபார்த்த பின்னர் அவரை வாக்களிக்க அனுமதிக்கலாம்.

விநியோகிக்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு விவரங்களை தேர்தல் அலுவலர், அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் அளிக்க வேண்டும். வாக்குச்சாவடி சீட்டை விநியோகிக்கும் அலுவலர் நடுநிலைமையோடு செயல்படுகிறாரா என்பதை உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

அந்தந்த தொகுதியில் வாக்குச்சாவடி சீட்டுகள் முறையாக விநியோகிக்கப்பட்டுள்ளனவா என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி சீட்டுகளை மொத்தமாக தனிநபரிடம் அளித்து விநியோகிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக வரும் புகார்களை அதிகாரிகள் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குப் பதிவுக்கு 5 நாள்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடி சீட்டுகள் அனைத்தும் விநியோகிக்கப்பட வேண்டும்.

சீட்டை நகல் எடுக்கக்கூடாது. வாக்குப் பதிவின்போது நகல் சீட்டுகள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. வாக்குச் சாவடிக்குள் கேமரா, செல்போன் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது போன்ற முழுமையான விவரங்கள் சீட்டின் பின்புறம் அச்சிடப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x