Published : 23 Jan 2021 02:29 PM
Last Updated : 23 Jan 2021 02:29 PM
''நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை'' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் விழாவில் பிரம்மாண்ட ஊர்வலத்தை சங்கொலி முழங்கி மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டில் இதே நாளில் பிறந்தார். நேதாஜியின் 125-வது பிறந்த நாள் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அவரது பிறந்த தினத்தை 'பராக்ரம் திவாஸ்' (துணிச்சல் தினம்) என்று கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கொல்கத்தாவில் மேற்கு வங்க அரசின் சார்பில் நேதாஜிக்கு சிறப்பு தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று மதியம் 12.15 மணிக்கு நேதாஜி பிறந்த நாள் விழாவின் பிரம்மாண்ட ஊர்வலத்தை சங்கொலி முழங்கி தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கான மக்கள், திரிணமூல் காங்கிரஸின் பல மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட வீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சியாம் பஜார் பகுதியில் தொடங்கும் இந்த ஊர்வலம் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் செல்லும். ஊர்வலம் ரெட் ரோட்டில் உள்ள நேதாஜியின் சிலையில் நிறைவடையும். அங்கு நடைபெறும் கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றவுள்ளார்.
நேதாஜி பிறந்த நாள் விழா ஊர்வலத்தைத் தொடங்கிவைத்து மம்தா பானர்ஜி கூறியதாவது:
"தேர்தல் வருகிறது என்பதற்காக மட்டுமே நாங்கள் நேதாஜியின் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் அவரது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். நேதாஜியின் 125-வது பிறந்த நாளை இம்முறை நாங்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடுகிறோம்.
ரவீந்திரநாத் தாகூர் நேதாஜியை 'தேஷ்நாயக்' என்று வர்ணித்தார். அதனால்தான் இந்த நாளை 'தேஷ்நாயக் திவாஸ்' என்ற பெயரில் அவரது பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்தோம். நேதாஜி நாட்டின் மிகப் பெரிய சுதந்திரப் போராளிகளில் ஒருவர். அவர் ஒரு சிறந்த தத்துவவாதி.
நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை. அவரது பிறந்த நாளை தேஷ்நாயக் திவாஸ் எனக் கொண்டாட வேண்டும். நேதாஜியின் பிறந்த நாளைத் தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT