Published : 23 Jan 2021 01:12 PM
Last Updated : 23 Jan 2021 01:12 PM
தமிழ்க் கலாச்சாரத்தைப் பாதுகாப்போம் என்று தமிழகத்துக்குப் புறப்படும் முன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி இப்போது இருந்தே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 3 நாட்கள் பயணமாகத் தமிழகத்துக்கு இன்று வருகை தந்துள்ளார்.
ராகுல் காந்தி எம்.பி., வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு ராகுல் காந்தி கோவை வந்தார். காளப்பட்டியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் குறு, சிறு தொழில் துறையினரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடுகிறார். மாலை திருப்பூர் சென்று தொழில்துறையினருடன் கலந்துரையாடல் நடத்துகிறார்.
நாளை ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி, பெருந்துறை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதன்பின் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தமிழகத்துக்குக் கடந்த ஒரு மாதத்தில் 2-வது முறையாக ராகுல் காந்தி பயணம் செய்கிறார். பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரத்துக்குச் சென்று ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ராகுல் காந்தி ரசித்தார். அதன்பின் இன்று தமிழகத்துக்கு 2-வது முறையாக ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “தமிழகத்துக்கு மீண்டும் நான் வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கொங்கு மண்டலத்தில் உள்ள தமிழக சகோதர, சகோதரிகளுடன் நேரத்தைச் செலவிடப் போகிறேன்.
மோடி அரசின் தாக்குதலில் இருந்து நாம் ஒன்றாக இணைந்து, தனித்துவமான தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்போம், பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT