Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த இளம் முஸ்லிம் தலைவர் புதிய கட்சி தொடங்கியுள்ளது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மற்றொரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் மேற்கு வங்கத்துக்கும் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.அங்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக பெரும் சவாலாகி வருகிறது. இத்துடன் மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள சுமார் 90 தொகுதிகளில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி முதல் முறையாகப் போட்டியிடுகிறது. பிஹாரில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் முதல் முறையாக இங்கு தனித்து களம் இறங்குகிறது.
இதனால் மம்தாவின் வாக்குகள் பிரிந்து பாஜக.வுக்கு சாதகமாகும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸின் ஆதரவாளராக இருந்து வந்த முக்கிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த பீர்ஜாதா அப்பாஸ் சித்திக்கீ (34),‘இந்தியன் செக்யூலர் ஃபிரன்ட்’ (ஐஎஸ்எஃப்) என்ற பெயரில்அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இவர் முஸ்லிம்களால் மிகவும் மதிக்கப்படும் பர்புரா ஷெரீப் தர்காவின் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தலைமையின் கீழ்அசாதுதீன் ஒவைஸி மேற்கு வங்கத்தில் போட்டியிட விரும்பினார். இதை ஏற்காத பீர்ஜாதா, திரிணமூல் கட்சியுடன் கூட்டணி பேசினார்.
புதிய கட்சி தொடங்கவுள்ள தமக்கு 40 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்றார். இதை மம்தாஏற்கவில்லை. இந்நிலையில் முஸ்லிம், தலித் மற்றும் பழங்குடியினருக்கு ஆதரவாக ஐஎஸ்எஃப் கட்சியை நேற்று முன்தினம் தொடங்கிய அவர், மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் முதல்வர் மம்தாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து பீர்ஜாதா அப்பாஸ் கூறும்போது, “மம்தா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அரசுப் பணியில் முஸ்லிம்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்” என்றார். ஆனால் பதவியில் அமர்ந்தபின்னர் அதை மறந்துவிட்ட அவர், இந்து - முஸ்லிம்கள் இடையே பிளவை மட்டுமே ஏற்படுத்தியுள்ளார். எனவே முஸ்லிம்களே தங்களுக்காக இந்தக் கட்சி ஆரம்பித்துள்ளனர்” என்றார்.
மேற்கு வங்கத்தில் 2011 வரை 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் வரும் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்களுடன் சேர்த்துமுஸ்லிம் கட்சிகளும் மம்தாவின் வாக்குகளை பிரிக்கும் வாய்ப்புள்ளதால் இம்முறை தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டப்பேரவை ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ‘கிங் மேக்கர்’ ஆக உருவாகலாம் என பீர்ஜாதா நம்புகிறார்.
மேலும் ஒரு திரிணமூல் கட்சி அமைச்சர் ராஜினாமா
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல்கள் காரணமாக முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சில மாதங்களில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பாஜக.வும் தீவிரமாக தயாராகி வருகின்றன. திரிணமூல் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் கட்சியின் நிர்வாகிகள் விலகி வருகின்றனர். கட்சியில் இருந்து விலகியவர்களில் பலர் பாஜக.வில் சேர்ந்தனர். ஏற்கெனவே சோவன் சட்டர்ஜி, சுவேந்து அதிகாரி, லட்சுமி ரத்தன் சுக்லா ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையி்ல், வனத்துறை அமைச்சராக இருந்து வந்த ராஜீப் பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். எனினும், தான் பதவி விலகியதற்கான காரணம் குறித்து கடிதத்தில் அவர் விளக்கவில்லை. ஆளுநர் ஜெகதீப் தன்கரையும் ராஜீப் பானர்ஜி சந்தித்து பேசினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். தோம்ஜூர் தொகுதி எம்எல்ஏ.வான ராஜீப் பானர்ஜி கடந்த சில வாரங்களாக திரிணமூல் காங்கிரஸில் உள்ள சில தலைவர்கள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். அமைச்சரவையில் இருந்து இதுவரை 4 அமைச்சர்கள் விலகியுள்ளனர். எம்எல்ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் விலகிவரும் நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் திரிணமூல் காங்கிரசுக்கும் இது பின்னடைவாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT