Last Updated : 22 Jan, 2021 06:20 PM

6  

Published : 22 Jan 2021 06:20 PM
Last Updated : 22 Jan 2021 06:20 PM

அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் பேச்சு விவகாரம்; நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை தேவை: காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தீர்மானம்

கோப்புப்படம்

புதுடெல்லி

ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கும், ஒளிபரப்புப் பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் உரையாடல்கள் தேசப் பாதுகாப்பு விதிகளை மீறியது, ரகசியக் காப்புச் சட்டத்தை மீறியது என்பதால் நாடாளுமன்றக் கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 11-ம் தேதி, டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை போலீஸார் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, ஒளிபரப்புப் பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா இடையே 200 பக்கங்கள் கொண்ட வாட்ஸ் அப் உரையாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த உரையாடல்களில், காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடப்பதற்கு முன்பாகவே அதுபற்றிப் பேசப்பட்டுள்ளது, பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிர முகாம்கள் மீது தாக்குதல் நடத்த ராணுவம் செல்லும் முன்பே அதுகுறித்தும் பேசப்பட்டுள்ளது.

தேசப் பாதுகாப்புக்கும், ராணுவ ரகசியங்கள் குறித்தும் முன்கூட்டியே ஒரு சேனல் நிர்வாகிக்கு தெரியப்படுத்தியது துரோகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக, தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசும்போது, “அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடல் குறித்துக் கடுமையாகச் சாடியிருந்தார்.

அனைத்து விவகாரங்களும் வெளியே கசிந்தபின்பும் ஏதும் தெரியாததுபோல் மத்திய அரசு மவுனமாக இருக்கிறது. தேசப் பற்றாளர்கள், தேசியவாதம் பற்றி பிறருக்குச் சான்றளித்தவர்கள் நிலைப்பாடு தற்போது வெளியாகிவிட்டது” எனச் சாடியிருந்தார்.

இந்நிலையில், காரியக் கமிட்டியின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடல் என்பது தேசப் பாதுகாப்பு விதிகளை மீறியது, ரகசியக் காப்புச் சட்டத்தை மீறியதால் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை தேவை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது”

“அர்னாப் கோஸ்வாமிக்கும், பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் உரையாடல்கள் தேசப் பாதுகாப்பு விதிகள், ரகசியக் காப்புச் சட்ட விதிகளை மீறியதாக இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து யாரெல்லாம் இதில் ஈடுபட்டுள்ளார்கள், யாருக்குப் பங்குள்ளது என்பது குறித்து குறிப்பிட்ட காலவரையரைக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

வாட்ஸ் அப் உரையாடல்களில் கூறப்பட்டுள்ளவை எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி தேசப் பாதுகாப்பைச் சமரசம் செய்துகொள்வதாக இருக்கிறது. ராணுவச் செயல்பாடுகள் தொடர்பான நுணுக்கமான தகவல்கள், பாதுகாப்பு விதிகளும் மீறப்பட்டுள்ளன. மத்திய அரசில் உயர்ந்த அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் இதில் தொடர்பில் உள்ளனர் என்பது தெளிவாகிறது.

நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான மோசமான தாக்குதல், அரசின் கொள்கைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துதல், அவதூறு செயதல், அரசின் கட்டமைப்புகளை அடிபணிய வைத்தல் போன்ற மன்னிக்க முடியாத விஷயங்கள் நடந்துள்ளது வெளியாகியுள்ளது.

அரசு சாராத நபர்களுடன் இணைந்து மோடி அரசு வெட்கக்கேடான சமரசம் செய்து கொண்டது வெளிப்பட்டுவிட்டது. ஆனால், இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் பிரதமர் மோடியும், மத்திய அரசும் தொடர்ந்து மவுனமாகவே இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மத்திய அரசின் மவுனம் என்பது அர்னாப்புடன் வைத்துள்ள கூட்டு, குற்ற உணர்ச்சி, குற்றம் ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிடுகிறது. தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதற்கு, இந்திய எதிரிகளுக்கு உதவியதற்கும் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்''.

இவ்வாறு காங்கிரஸ் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x