Published : 22 Jan 2021 05:31 PM
Last Updated : 22 Jan 2021 05:31 PM
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனும் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று மத்திய அரசு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால், விவசாயிகள் தரப்பில் தங்கள் கோரிக்கையில் திட்டவட்டமாக இருப்பதால், 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் இழுபறியில் செல்கிறது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே 10-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது, மத்திய அரசின் சார்பில் விவசாயிகளிடம் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இதன்படி, அடுத்துவரும் 18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை நிறுத்திவைப்பது என்றும், வேளாண் சட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட குழுவில் அனைத்துத் தரப்பினரும் பேசி சுமுக முடிவு எடுத்தபின் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் இந்தத் திட்டம் குறித்து ஆலோசித்த விவசாயிகள் சங்கத்தினர். அதற்குச் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதகள், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முதல் சுற்று அமர்வு முடிந்த நிலையில் இடைவேளை விடப்பட்டது. அப்போது, விவசாயிகள் தரப்பில் நிருபர்களுக்குப் பேட்டி அளிக்கப்பட்டது.
வேளாண் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் கூறுகையில், “வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர கோரிக்கையில் மாற்றம் ஏதுமில்லை.
ஆனால், இது தொடர்பாகத் தனிப்பட்ட முறையில் ஆலோசிக்கலாம் என அமைச்சர் கூறுகிறார். ஆனால், சட்டங்களைத் திரும்பப் பெறும் விஷயத்தில் மாற்றுக் கருத்தில்லை என்பதைத் தெரிவித்துவிட்டோம்” எனத் தெரிவித்தார்.
பாரத் கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறுகையில், “வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கக் கூடாது. திரும்பப் பெற வேண்டும் எனும் எங்களின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்.
ஆனால், எங்கள் கோரிக்கையைத் திரும்பப் பெறக்கோரி மத்திய அமைச்சர் தோமர் வலியுறுத்துகிறார். ஆனால், எங்கள் முடிவில் மாற்றமில்லை. இதை மதியம் உணவு இடைவேளைக்குப் பின் கூடும் 2-வது அமர்வில் தெளிவாகக் கூறுவோம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT