Published : 22 Jan 2021 04:00 PM
Last Updated : 22 Jan 2021 04:00 PM
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்ய நடக்கும் உட்கட்சித் தேர்தலை மே 29-ம் தேதி நடத்துவதற்கு காரியக் கமிட்டிக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்குப் புதிய, எழுச்சிமிக்க, ஆக்கபூர்வமான தலைமை தேவை என்று மூத்த தலைவர் 23 பேர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சித் தேர்தல் நடத்தி, புதிய தலைவரைத் தேர்வு செய்ய 5 உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழுவை சோனியா காந்தி அமைத்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி, ராஜேஷ் மிஸ்ரா, கிருஷ்ணா கவுடா, ஜோதிமணி, அரவிந்தர் சிங் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் நடத்தும் பணியைக் கவனித்து வருகிறது.
தேர்தல் நடத்துவதற்கான பட்டியலை இந்தக் குழுவினர் தயாரித்துள்ள நிலையில், அதற்கு முன்பாக, காரியக் கமிட்டியிடம் தேர்தல் நடத்தும் தேதி குறித்து ஒப்புதல் பெற வேண்டும்.
காரியக் கமிட்டிக் கூட்டம் தொடங்கியதும் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம், மத்திய தேர்தல் குழுவினர் தேர்தல் நடத்த அறிவித்துள்ள பட்டியலை படிக்கக் கேட்டுக்கொண்டார்.
மத்திய தேர்வுக் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, மே 29-ம் தேதி உட்கட்சித் தேர்தலை நடத்தப் பரிந்துரைத்துள்ளார் என்று வேணுகோபால் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் நடத்தும் தேதியை காரியக் கமிட்டி உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடவில்லை.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவி ஏற்றார். ஆனால், ஓராண்டுக்கு மேல் ஆகியும் முழுநேரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆக்கபூர்வமான தலைமை இல்லை எனக் கூறி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் கடிதம் எழுதினர்.
குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, பூபேந்தர் ஹூடா, பிரிதிவிராஜ் சவான், கபில் சிபல், மணிஷ்திவாரி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 23 பேர் எழுதிய கடிதம் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 23 தலைவர்களையும் நேரில் சந்தித்து சோனியா காந்தி ஆலோசனையும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT