Published : 22 Jan 2021 12:47 PM
Last Updated : 22 Jan 2021 12:47 PM
வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைக்கிறோம் எனும் மத்திய அரசின் லாலிபாப் மிட்டாயை விவசாயிகள் புறக்கணித்துவிட்டார்கள். இதன் மூலம் விவசாயிகள் விழித்துக் கொண்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே 10-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது, மத்திய அரசின் சார்பில் விவசாயிகளிடம் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இதன்படி, அடுத்தவரும் 18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை நிறுத்திவைப்பது என்றும், வேளாண் சட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட குழுவில் அனைத்துத் தரப்பினரும் பேசி சுமுக முடிவு எடுத்தபின் முடிவெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் இந்தத் திட்டம் குறித்து ஆலோசித்த விவசாயிகள் சங்கத்தினர், அதற்குச் சம்மதிக்கவில்லை. விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு முன்வைத்த 18 மாதங்கள் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கும் எனும் முடிவை விவசாயிகள் சங்கம் புறக்கணிக்கிறது.
வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறோம், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும். இதுவரை 143 விவசாயிகள் உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். நாங்கள் இந்தக் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டால், போராட்டம் பிளவுபடும். விவசாயிகளின் தியாகம் வீண்போகாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று மீண்டும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்துள்ளார். அதில், “நீங்கள் நாள்தோறும் வெளியிடும் வெற்று அறிக்கைகள், அட்டூழியங்களை நிறுத்துங்கள். வேளாண்துறைக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெற்றாலே போதுமானது” என மத்திய அரசைச் சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மோடிஜி, இந்த தேசத்தின் விவசாயிகள் விழித்துக் கொண்டார்கள். நீங்கள் எப்போது விழிப்பீர்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 147 விவசாயிகளின் தியாகம் வீண்போகாது. மத்திய அரசு வழங்கிய லாலிபாப் மிட்டாயை விவசாயிகள் புறக்கணித்ததன் மூலம் விழித்துக்கொண்டோம் என்பதை வெளிப்படுத்திவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT