Published : 22 Jan 2021 01:01 PM
Last Updated : 22 Jan 2021 01:01 PM
குடியரசு தின விழாவை முன்னிட்டு ராஜஸ்தான் உள்ளிட்ட அனைத்து எல்லைப் பகுதிகளிலும் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 26, குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பாதுகாக்க தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல நாட்டின் எல்லைகளிலும் ஊடுருவலைத் தடுக்க கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்பு படை கமாண்டர் ஜே.எஸ்.சந்து கூறியதாவது:
''குடியரசு தினத்திற்கு முன்னதாகவே ஊடுருவல்களைத் தடுக்கும் பணிகள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஊடுருவல்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்யும் விதமாக இந்த நடவடிக்கைகள் அமையும்.
இதற்காக நாங்கள் 'சர்த் ஹவா ஆபரேஷன்' தொடங்கியுள்ளோம். ஜனவரி 21ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை ஜனவரி 27 வரை தொடரும். இதன் கீழ் நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
குடியரசு தினத்திற்கு முன்பு இந்த நடவடிக்கை முக்கியமானது. எங்கள் தலைமையகத்தின் பாதுகாப்புப் படை வீரர்கள் ராஜஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். சர்த் ஹவாவின் கீழ் நாட்டின் அனைத்து எல்லைகளிலும் சிறப்பு போலீஸ் சோதனைச் சாவடிகள் செயல்படும்''.
இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை கமாண்டர் தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்புப் படை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆபரேஷன் "கரம் ஹவா" மற்றும் குளிர்காலத்தில் ஆபரேஷன் "சர்த் ஹவா" ஆகியவற்றை வழக்கமான பயிற்சியாக நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT