Published : 21 Jan 2021 10:06 PM
Last Updated : 21 Jan 2021 10:06 PM
பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு கடுமையான சுவாசப் பிரச்சினை இருப்பதால் மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்,அவர் பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே சசிகலாவை அவரது உறவினர்கள் டி.டி.வி.தினகரன், விவேக், ஜெயராமன், மருத்துவர் சிவகுமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். சசிகலாவுக்கு கரோனா தொற்று இல்லை என்றாலும் சி.டி.ஸ்கேன் எடுத்து பரிசோதிக்குமாறு வலியுறுத்தினர்.
பின்னர் பவுரிங் மருத்துவமனையின் டீன் மனோஜ்குமார் கூறுகையில், '' சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் குறைந்துள்ளது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவு, ஆக்ஸிஜன் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்தும் சீராக உள்ளது. சுவாசப் பிரச்சினை இருப்பதால் சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். அங்கு 3 நாட்கள் வரை சசிகலா இருக்க வாய்ப்பு இருக்கிறது''என்றார்.
இதையடுத்து இன்று பிற்பகலில் சசிகலா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கரோனா உறுதி:
விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன் செய்யப்பட்டது. அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், நுரையீரலில் லேசான தொற்று இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலும் சசிகலாவுக்கு கடுமையான சுவாசப் பிரச்சினை இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சசிகலாவின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சந்தேகம்:
இதனிடையே வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர், சசிகலாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவாக உள்ளது. எனவே அவரை கேரளா அல்லது புதுச்சேரி மருத்துவமனைக்கு மாற்றி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT